×

தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை

 

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு:

வேளச்சேரி: மேடவாக்கம் அம்பேத்கர் நகர், சேரன் தெருவில் நிறுத்தி இருந்த ஷேர் ஆட்டோவுக்குள் நெற்றியில் பலத்த காயத்துடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் அதே தெருவில் தங்கி ஷேர் ஆட்டோ ஓட்டிவந்த சுரேஷ்(48) என தெரியவந்தது. மேலும் டிரைவர் இருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ‘ப’ வடிவ இரும்புத் தகட்டில் சுரேஷின் நெற்றி மோதி, இடது கண் புருவத்தின் மேற்பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

விசாரணையில் சுரேஷின் பூர்வீகம் கோடம்பாக்கம், லிபர்ட்டி காலனி என்பதும், இவருக்கு சலோமி என்ற மனைவியும், சந்தோஷ் (19), கார்த்திகேயன் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர். சுரேஷ் கடந்த 17 ஆண்டுகளாக குடும்பத்தினரைப் பிரிந்து தனியாக வசித்து வருவதும், இவரது மனைவி மகன்களுடன் அண்ணாநகர் அருகே நடுவன்கரை பஜனை கோவில் தெருவில் வசித்து வருவது தெரியவந்தது.பின்னர் மனைவி சலோமிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சுரேஷ்க்கு நீரிழிவு நோய் இருந்ததால் வலது காலின் சுண்டுவிரல் அகற்றப்பட்டிருந்ததும், நீண்டகாலமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயத்துடன் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தாக் (21) என்பவர் கடந்த 15 நாட்களாக பணிபுரிந்து வந்தார். இவர் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகுதியில் உள்ள வாடகை அறையில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து முஸ்தாக் தனது அறைக்கு வந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், முஸ்தாக்கை கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் முஸ்தாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அடுத்த கண்ணம்பிவிளையை சேர்ந்தவர் சிங்கம் (60). கதம்பை லோடு ஏற்றும் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி தனியாக வசிக்கிறார்கள். சிங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்தும் மது அருந்துவார். இதே போல் கண்ணம்பிவிளையை சேர்ந்தவர் லிங்கசாமி (49). கொத்தனார். திருமணமாகாதவர். நேற்று முன்தினம் இரவு சிங்கம், லிங்கசாமி மற்றும் சிலர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு காலிமனையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த இடத்தில் சிங்கம், லிங்கசாமி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதில் லிங்கசாமிக்கு கல்லால் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. சிங்கத்துக்கு கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. பின் தலையிலும் காயம் இருந்தது. தகவலறிந்து எஸ்.பி. (பொறுப்பு) திவ்யா, கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதையடுத்து அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

ஒரே சமயத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டது அந்த ஊரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த கொலைகள் தொடர்பாக, ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் கண்ணம்பிவிளை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் (34) என்பவர், கொலை செய்யப்பட்டவர்களுடன் சேர்ந்து மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று மதியம், தனது வீட்டின் அருகே அதிக மது போதையில் இருந்த தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நள்ளிரவு 12 மணி வரை மூவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், லிங்கசாமியும், சிங்கமும் அவதூறாக திட்டியதால் அவர்கள் போதையில் இருந்த போது கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

குமரி மாவட்டத்தில் சமீப காலமாக வார இறுதி நாளில் அதிக குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் சமீப காலமாக வார இறுதி நாளில் அதிக குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் அடுத்த புதுக்கிராமம் அருகே தண்டநாயக்கன்கோணத்தில் தனியார் பள்ளி கட்டுமான பணியை மதுரையை சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் தங்கபாண்டி (40) செய்து வருகிறார். இவரிடம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சரவணகுமார் (35) வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஊருக்கு செல்ல தங்கபாண்டியிடம், சரவணக்குமார் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்றதால் ஆத்திரத்தில் கம்பியால் அடிக்க முயன்றுள்ளார். மற்ற தொழிலாளர்கள் சேர்ந்து சமரசம் செய்துள்ளனர்.

இதையடுத்து ஊருக்கு செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தங்கப்பாண்டி வந்தபோது திருநெல்வேலியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும், தங்கபாண்டியன் கட்டிட வேலை நடக்கும் பள்ளிக்கே வந்தார். அப்போது வெளியே சரவணக்குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அருகில் கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து அவரது தலையில் தங்கபாண்டியன் போட்டுள்ளார். இதில் தலைசிதைந்து சரவணகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிந்து தங்கபாண்டியை கைது செய்தனர். இந்த கொலை நடந்த சில மணி நேரத்தில், கண்ணம்பிவிளையில் இரட்டை கொலை நடந்துள்ளது. ஒரே நாளில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று காலை, வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற காரைக்குடி வடக்கு போலீசார், வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஸ் புனியா, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான வாலிபர் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (37), திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும், அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. நேற்றுமுன்தினம் இரவு மணிகண்டனுடன் தனியார் பாரில் மது அருந்தியதாக கூறப்படும் 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கல்புளிச்சான்பட்டியை சேர்ந்தவர் சித்திக் (25). நேற்றுமுன்தினம் இரவு செக்கானூரணி – விக்கிரமங்கலம் சாலையில் குளத்துபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2024ம் ஆண்டு சித்திக்கும், அவரது அண்ணனும் சேர்ந்து ஒருவரை கொலை செய்துள்ளனர். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணமா என விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம்(44), விவசாயி. இவர் சமையல் வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி கற்பகம்(36). இவர்களுக்கு சுகாசில், துஷ்யந்த் ஆகிய 2 மகன்கள், தூதுமலர் என்ற மகள் உள்ளனர். துலுக்கானத்தின் அண்ணன்கள் சேகர், எத்துராஜ். இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தனித்தனியாக உள்ளது. சேகர்த 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன்கள் சத்தியமூர்த்தி(34). சக்திவேல்(32) உள்ளனர்.
இந்நிலையில் துலுக்கானமும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து பயிரிடும் ஒரு விவசாய நிலத்தில், சத்தியமூர்த்தி வீடு கட்ட துலுக்கானத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.

அவர் பொது வழியை விட்டுவிட்டு வீடு கட்டிக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதையடுத்து வீடு கட்ட தொடங்கிய சத்தியமூர்த்தி, அதற்காக மண்ணை கொட்டியுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு நிலத்திற்கு சென்ற துலுக்கானம், வேர்க்கடலை செடிகள் மீது மண் கொட்டியிருப்பதை பார்த்து, சத்தியமூர்த்தியிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த சத்தியமூர்த்தியின் தம்பி சக்திவேல், தாய் சரளா, மனைவி கார்த்திகா, சக்திவேல் மனைவி சந்திரா ஆகியோர் சேர்ந்து, துலுக்கானத்தை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் துலுக்கானம் பலியானார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து சத்தியமூர்த்தி, சக்திவேல், சரளா, கார்த்திகா, சந்திரா ஆகிய 5 பேரையும் நேற்று காலை கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (71). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். தனது பெயரில் உள்ள 9 சென்ட் வீட்டுமனை இடத்தை விற்க முடிவு செய்திருந்தார். அந்த இடத்தில் இவருடைய மகன் கலியபெருமாள் (47) சிமென்ட் ஷெட் அமைத்து இருந்தார். அந்த இடத்தை விற்க ராமசாமி முயன்ற போது தனக்கே விற்பனை செய்யுமாறு கலியபெருமாள் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுக்கவே இரும்பு ராடால் தந்தை ராமசாமியை மகன் கலியபெருமாள் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமசாமி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Medavakkam ,
× RELATED புதுக்கோட்டை அருகே பயங்கரம்; ஓரின...