×

‘பாலினத்தையும் சோம்பேறித்தனத்தையும் குழப்பி கொள்ளாதீர்கள்’ ‘சமைப்பதும் சுத்தம் செய்வதும் பெண்களின் கடமை அல்ல’: பிரியங்கா சோப்ரா காட்டம்

 

மும்பை: பிரான்சில் நடைபெற்ற 2026 கான்ஸ் லயன்ஸ் சர்வதேச படைப்பாற்றல் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பேசியதாவது: ஒரு கலைஞர், தொழிலதிபர் என எந்த துறையாக இருந்தாலும், நம்முடைய அசல் தன்மையை தக்க வைத்து கொள்வது மட்டுமே நீண்ட கால வெற்றியை தரும். மக்களின் கவனத்தை ஈர்ப்பது கடினமான ஒன்று, அதற்கு நம்மை நாமே தொடர்ந்து புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். ரசிகர்களின் கவனம் மற்றும் அன்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

தற்போதைய காலகட்டத்தில் ஓடிடி தளங்களின் வருகையால் சினிமாவுக்கான எல்லைகள் சுருங்கிவிட்டன. உங்களிடம் ஒரு நல்ல கதை இருந்தால், அதை ஒரு சாதாரண கேமராவில் எடுத்து யூடியூபில் பதிவிட்டாலும் அது உலக புகழ்பெற்ற திரைப்படமாக மாற முடியும். சினிமா பின்னணி அல்லது பெரிய தொடர்புகள் இல்லாத புதிய படைப்பாளிகளுக்கும், பெண்களின் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். வீட்டு வேலைகள் பொதுவானவை. வீட்டை சுத்தம் செய்வதும் சமையல் செய்வதும் பெண்களின் வேலை அல்ல.

அது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான அடிப்படை வாழ்வியல் தகுதி, பாலின வேறுபாட்டை உங்களது சோம்பேறித்தனத்தோடு குழப்பி கொள்ளாதீர்கள். எனது இந்தி மொழி படங்களில், நான் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் மிகச்சிறந்த நடிகர்களுடன் பணியாற்றியுள்ளேன்; அற்புதமான கதைகளை சொல்லி, பலதரப்பட்ட வகைகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால், அமெரிக்காவில், ஹாலிவுட்டில், எனது ஆங்கில மொழி படங்களில் நான் அதை அவ்வளவாக செய்யவில்லை” என்றார்.

Tags : Priyanka Chopra ,Mumbai ,2026 Cannes Lions International Festival of Creativity ,France ,
× RELATED புதிதாக பாஸ்போர்ட் பெற...