×

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மகன் கட்டிய கோயில்

சென்னை: மறைந்த எழுத்தாளரும் திரைப்பட கதாசிரியருமான பாலகுமாரனுக்கு, அவரது மகன் சூர்யா பாலகுமாரன் கோயில் கட்டியுள்ளார். தந்தையின் நினைவாக கட்டிய இந்த கோயில் குறித்து சூர்யா பாலகுமாரன் கூறுகையில், ‘‘திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனதுக்கு பிடித்த கோயிலாக இது மாறியுள்ளது. கடந்த 5ம் தேதி என் தந்தையின் 80வது பிறந்தநாளில் குடமுழுக்குடன் கோயில் திறப்பு விழா நடந்தது.

இந்த கோயிலில் என் தந்தையின் திருவுருவ சிலையுடன், சரஸ்வதி, லட்சுமி, விநாயகர், பைரவர் ஆகிய கடவுள்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குருநாதரான யோகி ராம் சுரத்குமாரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கான செலவை பார்க்காமல் தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக மட்டுமே இதை நான் பார்த்தேன். நான் மட்டும் அவருக்கு மகன் இல்லை அவரது பல லட்சம் வாசகர்களும் அவருக்கு மகன் போன்றவர்கள் தான்.

அவர் உயிருடன் இருந்தபோது செய்த கொடை, தானங்கள் அனைத்தையும் அவர் பெயரில் தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். சினிமா எங்களது குடும்பத் தொழில் ஆகிவிட்டது. நான் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தில் வெகு விரைவில் இயக்குனராக அறிமுகமாவேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.

Tags : Balakumaran ,Chennai ,Surya Balakumaran ,Dharapuram, Tiruppur district ,Saraswati ,Lakshmi ,Vinayagar ,Bhairava ,
× RELATED சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்