‘பாலன்’ இயக்குனருடன் இணையும் தனுஷ்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிதம்பரம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பாலன்’. தமிழ், மலையாளத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், வணிக ரீதியாக ‘பாலன்’ சற்று தடுமாறியது. இந்நிலையில், பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு தனியாக படத்தை திரையிட்டு காண்பித்து வருகிறார் சிதம்பரம். அந்தவகையில் படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம் ‘படம் மிகவும் நன்றாக இருந்தது. அதன் எழுத்து வடிவம் சிறப்பாக அமைந்திருந்தது. அனைவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஒட்டுமொத்தத்தில், இது ஒரு சிறந்த திரைப்படமாகும்’ என்று பாராட்டினார்.
முன்னதாக ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டினார் தனுஷ்.

அவர் இயக்கத்தில் படம் நடிக்க விரும்புவதாகவும் தனுஷ் தெரிவித்தார். அப்போது தனுஷ், சிதம்பரம் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. பிறகு கால்ஷீட் பிரச்னையால் ‘பாலன்’ படத்தை இயக்கினார் சிதம்பரம். தற்போது மீண்டும் தனுஷ் படத்தை இயக்க தயாராகி வருகிறார் சிதம்பரம். ஆனால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம் சாப்டர் 1: உதிரம் – தி பிளட் வுட்’ என்ற படத்தில் நடித்து வரும் தனுஷ் அதனை தொடர்ந்து ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், பிறகு ‘வடசென்னை 2’ என அடுத்த 3 வருடங்களுக்கு பிசியாக உள்ளார். இதனால் சிதம்பரம் இயக்கும் படத்தில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: