×

கடமலை – மயிலை ஒன்றியத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் விலை ரூ.51 ஆயிரமாக உயர்வு

*விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு : கடமலை – மயிலை ஒன்றியத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் விலை ஒரு டன் ரூ.51 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடமலை – மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, குமணனதொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள் காங்கேயம், திருச்சி, சென்னை மட்டுமின்றி டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை – மயிலை ஒன்றியத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.அதன் காரணமாக இப்பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்தது.

அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் அவற்றின் கொள்முதல் விலை குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேங்காய் வரத்து குறைவின் காரணமாக, விலை அதிகரித்து வருகிறது. இதன்படி தற்போது ஒரு தேங்காய் ரூ.22 முதல் 23 வரை விற்பனையாகி வருகிறது.

இப்பகுதியில் இருந்து தேங்காய்கள் மூன்று தரமாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே தேங்காய் விலை உயர்வு எதிரொலியாக தேனி, மதுரை, திண்டுக்கல், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோர் கடமலை, மயிலாடும்பாறை மற்றும் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்துள்ளனர்.

இங்கு தங்கியிருக்கும் இவர்கள் தேங்காய்களை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தேங்காய் பருப்பு கொள்முதல் விலை ஒரு டன் ரூ.50 ஆயிரம் முதல் 51 ஆயிரம் வரை பருப்பின் தரத்தின் அடிப்படையில் கூடுதல் விலைக்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kadamalai ,-Mayilai union ,Varusanadu ,Kadamalai- ,Mayilai union ,
× RELATED மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.60 கோடி...