டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவிகுமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 2025 டிச.1-ல் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மதுரை அமர்வு,அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அதே வேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? தனி நீதிபதி ஜனவரி மாதமே உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது/ தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராமரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
