×

நடக்கவே முடியாதவர் மீண்டும் நீளம் தாண்டுதலில் அசத்தல்!

 

காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் தடகளம் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் (27 வயது) தொடர்ந்து 2வது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அவர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார். ஜமைக்காவின் தஜய் கேல் (8.15 மீ.) தங்கப் பதக்கமும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்ஸி (8.08 மீ.) வெண்கலமும் வென்றனர். ஸ்ரீசங்கர் ஏற்கனவே பர்மிங்காம் 2022 காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளி வென்றிருந்தார்.

2024 ஏப்ரலில் பாலக்காட்டில் பயிற்சி மேற்கொண்டபோது ஸ்ரீசங்கரின் இடது கால் தசைநார் கிழிந்து படுகாயம் அடைந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், ‘மீண்டும் போட்டிகளில் பங்கேற்பது பற்றி யோசிக்க வேண்டாம். முதலில் எழுந்து நடக்க முயற்சி செய்யுங்கள்’ என்று சொன்னபோது ஸ்ரீசங்கர் மட்டுமல்ல… அவரது தந்தையும் பயிற்சியாளருமான முரளியும் உடைந்து போனார்கள்.

கிளாஸ்கோ போட்டியின் ஸ்ரீசங்கர் பதக்கம் வென்றது கூறித்து முரளி கூறியதாவது: என் மகன் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடிந்தால் கூட போதும் என்று தான் முதலில் வேண்டிக்கொண்டேன். அவர் இன்று போட்டியில் பங்கேற்றதோடு பதக்கமும் வென்றுள்ளது ஏதோ அதிசயம் தான். 2024 சீசன் மட்டுமல்ல… மொத்தம் 650 நாட்களுக்கு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக குதித்துப் பழகி, 2025 ஏப்ரலில் 3 மீட்டர் தாண்டினார். அவரது பயிற்சியை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு அச்சமாக இருந்தது. மீண்டும் காயம் ஏற்பட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுமே என ஒரு அப்பாவாக மிகவும் கவலை அடைந்தேன். ஆனால், அவரது மன உறுதி இன்று சாதிக்க வைத்திருக்கிறது.

 

Tags : India ,Murali Sreeshankar ,Commonwealth Games ,Jamaica ,Tajay… ,
× RELATED காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு...