- வில்லுபுரா
- ஆண்டிலி
- ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்
- அஞ்ஜன்யாஸ்
- இறைவன்
- ஸ்ரீ வைசராஜர்
- நரசிம்மர்
- அனுமன்
- தெற்கு மகளிர் ஆறு
விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ., பயணித்தால், அந்திலி என்னும் தலத்தை அடையலாம். இங்கு “ஸ்ரீ லட்சுமி நரசிம்மரும்’’, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயரும் அருள்புரிந்துவருகிறார்கள். தென்பெண்ணை ஆறு அருகில், ஒரு பாறையின் மீது நரசிம்மரும், அனுமனும் காட்சியளிப்பதை பார்க்கும் போது, நம்மை அறியாமல் பரவசத்திற்கு சென்றோம்.
இக்கோயில், சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. கருடபகவான் தவமிருந்த மலைப் பாறையின் மீது இந்த கோயில் அமைந்துள்ளது. மேலும், இம்மலையானது கருடவடிவில் தோற்றம் அளிப்பது என்பது, சிறப்பு! சிறப்பிலும் சிறப்பு என்னவென்றால், வருடத்தின் 365 நாட்களும் மூலவரான நரசிம்மரின் மீது சூரிய ஒளி படுவதுதான். பிரகலாதனுக்காக விஷ்ணு பகவான், நரசிம்மர் அவதாரத்தை எடுத்தார். அவதாரமெடுத்த நரசிம்மராக காட்சி தந்த எட்டு தலங்களில், அந்திலி நரசிம்மர் தலமும் ஒன்று. தான் எடுத்த நரசிம்ம அவதாரத்தை, கருடபகவானுக்காக காட்சியளித்த தலம். இரணியனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. விஷ்ணுவின் பக்தனாக இருக்கிறான் என்பதற்காக, பிரகலாதனை தன் மகன் என்றுகூட பாராமல், அவனைக் கொலை செய்ய ஆணையிடுகிறான்.
இரணியனின் ஆணைக்கு இணங்க, பிரகலாதனை மலையில் இருந்து தூக்கி வீசுகிறார்கள், விஷத்தை கொடுக்கி றார்கள், எரியும் நெருப்பில் போடுகிறார்கள், இரும்புக் கம்பியால் சுடுகிறார்கள், யானையை ஏவி கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இவைகளில் இருந்து பகவான் விஷ்ணு, பிரகலாதனை காத்து அருள்கிறார். காரணம் “திட பக்தி’’ அதாவது பகவானின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், பக்தியும் பிரகலாதனுக்கு இருந்தது.
உன் ஹரி எங்கே?
இதனைக் கண்ட இரணியனுக்கு கோபம் தலைக் கேறியது. பிரகலாதனை தரதரவென இழுத்துவந்த
இரணியன்;
“டேய் பிரகலாதா… உன் ஹரி எங்கேடா இருக்கிறான்? கண்களில் காட்டு பார்ப்போம்.. அந்த மாயாவியை அடித்து கொன்றுவிடுகிறேன்’’ என்று கர்ஜித்தான் இரணியன்.
“என் ஹரி எங்கும் இருப்பார். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’’ என்று சிரித்த முகத்தோடு பிரகலாதன் கூறினான்.
“அப்படியென்றால் இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?’’ என்று இரணியன் கேட்டான்.
“நிச்சயம் இருப்பார். உண்மையான பக்தி மட்டும் இருந்தால் போதும், அந்த பக்திக்காக அவர் எங்கும் இருப்பார்’’ என்று பிரகலாதன் சொன்னதும், பிரகலாதனின் பக்திக்காக, அவசரத்தில் தனது வாகனமான கருடனை அழைத்துச் செல்லாமல், தானே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு அனைவருக்கும் தெரிந்ததே… தன் கதையை வைத்து இரணியன் தூணை பிளக்கிறான். தூணில் இருந்து வெளியே வந்த பகவான் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனை வதம் செய்து, பிரகலாதனை காத்து அருள்புரிகிறார்.
மீண்டும் நரசிம்ம அவதாரம்
பகவான் விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை, முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால், எப்போதும் தன்னை அருகிலேயே வைத்துக் கொண்டு, தன் மீதேறி பயணித்த பகவான் விஷ்ணு, இம்முறை தன்னை பரமபதத்திலேயே விட்டுவிட்டு சென்றதை நினைத்து, மனமுடைந்தார், கருடன். மேலும், தான் நரசிம்ம அவதாரத்தை காணமுடியவில்லையே.. என்ற ஏக்கம், கருடனுக்கு ஏற்பட்டது. மன அமைதியில்லாது இருந்த கருடன், பூலோகத்திற்கு வந்து, தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது, உண்ணாமல் உறங்காமல் கடும் தவத்தில் ஈடுபட்டார். இத்தவம், பல ஆண்டுகள் நீடித்தன. மிகவும் பலசாலியான கருடன், பலவீனமாக மாறினார். அவரின் வெப்பம் பூலோகம் முதல் வைகுண்டம் வரை பரவியது. வெப்ப அனலில், பூலோகமும் வைகுண்டமும் கதகதத்தது.
இதனால், அனைவரும் பகவான் விஷ்ணுவிடத்தில் முறையிட்டனர்.
கருடனுக்கு காட்சி தந்த விஷ்ணுபகவான்
“உனக்கு என்ன வேண்டும்? எதற்காக தவமிருக்கிறாய்’’ என்று கேட்க, “பிரகலாதனுக்காக தாங்கள் எடுத்த நரசிம்ம அவதாரத்தை, நான் காணவேண்டும்’’ என்று கருடன் வேண்டினார். அவரின் விருப்பப்படி, விஷ்ணு பகவான், மீண்டும் நரசிம்மராக காட்சி தந்தார். அதனைக் கண்ட கருடன், ஆனந்தமடைந்தார்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன்
கிருத யுகத்திலும், துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் அளவற்ற சாந்நித்தியம் கொண்ட அந்திலி நரசிம்மர் க்ஷேத்திரத்தை, தனது ஞான திருஷ்டியால், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அறிந்துகொண்டு, இக்கோயிலுக்கு விஜயம் செய்தார். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும் மலைப்பாறையை, கிழக்குத் திசையில் இருந்து பார்த்த வியாசராஜருக்கு கருடவடிவில் பாறை தென்பட்டது.
“ஆஹா… கருட வாகனத்தின் மீது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதே!’’ என்று பரவசமடைந்த வியாசராஜர், இந்த திவ்ய க்ஷேத்திரத்திலேயே சில காலம் தங்கி, நரசிம்மரை தினமும் பூஜித்து, ஆனந்தமடைந்தார். மேலும், நரசிம்மர் சந்நதிக்கு பின்புறத்தில், ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்தார்.
ஆகையால்தான், இக்கோயிலில் இன்றும் மத்வ சம்ரதாயத்தின்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. கருடன் போன்ற தோற்றமுடைய பாறையின் மீது நரசிம்மர் கோயில் இருப்பது போன்றேதான், நம் கண்களுக்கும் தெரிந்தது. கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, நரசிம்மரின் திருவுருவம் பதித்த நுழைவாயில் நம்மை வரவேற்கின்றன. அருகே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.
பிரார்த்தனை
நரசிம்மர் சிறிய வடிவில் காணப்பட்டாலும், மிக அழகாக காட்சியளிக்கிறார். நரசிம்மரின் தொடையில் அமர்ந்த நிலையில் லட்சுமிதேவியும் அழகாக அருள்பாலிக்கிறார்.
குடும்பத்தில் தொடர் பிரச்னை, தீராத கடன்தொல்லை, திருமணத் தடை, ஜாதக தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு பிரார்த்தனை செய்து வர, நன்மை நிகழும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 06:00 – 10:00 வரை, மாலை: 04:00 – 6:00 வரை. தொடர்புக்கு: 8883767112 (ஸ்ரீ காந்த் அர்ச்சகர்) வெளியூர் பக்தர்கள், இக்கோயிலுக்கு செல்வதற்கு முன், அர்ச்சகரிடம் தொடர்புகொண்டு, தரிசனத்தை உறுதிசெய்துகொள்ளவும். (தற்போதுபாலாலயம்தடைபெற்று
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது)
எப்படி செல்வது? விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூரிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், அரகண்டநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ தூரத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது.
