திமுக கவுன்சிலரை பதவி நீக்கம் செய்த நகராட்சி ஆணையரின் உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவேற்காடு நகராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜி.நளினி, நகராட்சியின் 10வது வார்டு கவுன்சிலராக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டு அவரது கணவர் நகராட்சியின் சில டெண்டர் பணிகளில் தனிப்பட்ட ஆதாயம் பெற்றதாகக் கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் கடந்த 2023 மார்ச் மாதம் திருவேற்காடு நகராட்சி ஆணையர், நளினியை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் சந்திர கவுண்டர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் ஆஜரான வழக்கறிஞர், நகராட்சி கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் நகராட்சி ஆணையருக்கு சட்டப்படி வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு நகராட்சிகள் தொடர்பான சட்டத்தின்படி, கவுன்சிலர் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் நகராட்சி ஆணையர் அதிகபட்சமாக மாவட்ட முதன்மை நீதிபதியிடம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கே உண்டு. இதனை மீறி ஆணையர் நேரடியாக தகுதி நீக்க உத்தரவு பிறப்பித்திருப்பது சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என்றும் வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நகராட்சி ஆணையருக்கு நேரடியாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை. மனுதாரரை திருவேற்காடு நகராட்சி ஆணையர் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அதனைத் தொடர்ந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ராஜினாமாவும் செல்லுபடியாகாது.

அவரை உடனடியாக திருவேற்காடு நகராட்சியின் 10வது வார்டு கவுன்சிலராக மீண்டும் பதவியில் அமர்த்தி, பதவியுடன் தொடர்புடைய அனைத்து உரிமைகள், சலுகைகள் மற்றும் சட்டப்பூர்வ பலன்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: