×

காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை; பாரா தடகளம், உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை: ஒரே நாளில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பாரா தடகளத்தில் பெண்களுக்கான குண்டு எறிதல் எப்-57 பிரிவில் இறுதிப்போட்டியில் 40 வயதான இந்தியாவின் ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் பாரா தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்து 20 ஆண்டுகால காத்திருப்புக்கு ஷர்மிளா தன்கர் முற்றுப்புள்ளி வைத்தார்.

2 வயதில் இடது காலில் போலியோ பாதிப்புக்குள்ளான ஷர்மிளா, இந்த ஆண்டு நடந்த ஃபாஸ்ஸா சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 4வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் இந்தியாவின் ஷில்பா ஷைலா 7.26 மீட்டர் எறிந்து 4வது இடத்தை பிடித்திருந்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக இருந்தது. 3வது இடத்தை பிடித்திருந்த நைஜீரியா வீராங்கனை யூச்சாரியா ஐயாசிக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இவர் பவுல் விதிமீறலில் ஈடுபட்டு 3வது இடத்தை பிடித்ததாக இந்திய தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நைஜீரியா வீராங்கனையின் எறிதலை மறுஆய்வு செய்யப்பட்டது. அதில், பவுல் செய்தது உறுதியானதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, இந்தியாவின் ஷில்பா ஷைலாவுக்கு வெண்கலம் பதக்கம் வழங்கப்பட்டது.

பளுதூக்குதலில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஞானேஷ்வரி யாதவ் மொத்தம் 199 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 58 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி மொத்தம் 199 கிலோ எடையை ( ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 112 கிலோ) தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான பளுதூக்குதலில் 79 கிலோ எடைப்பிரிவில் ஆந்திரா மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான வலூர் அஜய்பாபு ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோவும் (காமன்வெல்த் சாதனை ),கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோவும் என மொத்தம் 330 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்றார். மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது மொத்தம் 331 கிலோ (147+184) தூக்கி தங்கம் பதக்கம் வென்றார். ஒரு கிலோ வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தங்கம் கை நழுவி போனது.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தை சேந்த விவசாயின் மகனான 31 வயதான சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். ஜமைக்காவின் ரோமைன் வெக்ஃபோர்ட் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 2.25 மீட்டர் உயரத்தை தாண்டிய பிறகு, குஷாரே மற்றும் பெக்ஃபோர்ட் இருவராலும் 2.28 மீட்டர் உயரத்தை தாண்ட முடியவில்லை.

ஆனால் கவுண்ட்பேக் விதிமுறைப்படி ஜமைக்கா வீரர் தங்கப் பதக்கம் வென்றவராக அறிவிக்கப்பட்டார். உயரம் தாண்டுதலில் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் வென்ற வெண்கலமே அதிகபட்ச பதக்கமாக இருந்தது. தற்போது, குஷாரே வெள்ளி வென்றதன் மூலம் உயர தாண்டுதலில் முதல் வெள்ளியை வென்ற சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

* ‘வீட்டை விட்டு துரத்தப்பட்டேன் இது என் அம்மாவின் கனவு’
தங்கம் வென்ற ஷர்மிளா தன்கர் கூறுகையில், ‘‘நாட்டிற்காக பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேம். மிகுந்த பெருமையாக உணர்கிறேன். தொடர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொண்டே இருப்பேன். இது என்னுடைய கனவு மட்டுமல்ல, என் அம்மாவின் கனவும் கூட. இதை பார்த்து என் தாய் அளவற்ற மகிழ்ச்சி அடைவார். இந்த தங்கப் பதக்கத்தை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.

அம்மா பார்வையற்றவர், அப்பா ஒரு விவசாயி. 19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு 15 வயதிலும், 13 வயதிலும் மகள் இருக்கிறார்கள். ஒரு இரவு என்னை இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை என்னுடைய கணவர் கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். அதன்பிறகு நான் அங்கு செல்லவில்லை.

பின்னர் 2வது திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகே என்னுடைய வாழ்க்கை மாறியது. என்னுடைய கணவர் அஜித் சிங்தான் பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்து பயிற்சியாளரிடம் சேர்த்தார்’’ என்றார்.  2021ம் ஆண்டு தேசிய பாரா சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் அறிமுகமாகி தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Commonwealth Games ,India ,Athletics ,Glasgow ,Sharmila Dhankar ,23rd Commonwealth Games ,Glasgow, Scotland.… ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !