கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் 5 பேர் கைது

 

கிருஷ்ணகிரி, ஜூலை 29: கிருஷ்ணகிரி அருகே. ஏரியில் மண் கடத்தல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை எஸ்.எஸ்.ஐ., வெங்கடாசலம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், பூசாரிபட்டி அருகே கெட்டுகொல்லை ஏரி அருகில் ரோந்து சென்றனர். அப்போது, ஏரியில இருந்து, 2 பொக்லைன்கள் உதவியுடன், 3 டிப்பர் லாரிகளில் ஒரு கும்பல் மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கே.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் குமரேசன் (50), சந்திரசேகர் (30), அருண்குமார் (25), பொக்லைன் ஆப்ரேட்டர் சுரேஷ் (37), மற்றும் காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்த பொக்லைன் உரிமையாளர் சண்முகம் (37) என்பது தெரிந்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: