புவனகிரி : சிதம்பரம் அருகே ஓமகுளம் – சீர்காழி மெயின்ரோடு அருகில் சிவசக்தி நகர் உள்ளது. இங்குள்ள தெற்கு ரோடு பகுதி வடிகால் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
சிவசக்தி நகர் தெற்கு ரோடு வழியாக செல்லும் முக்கிய கால்வாய், மழைக்காலங்களில் உபரி நீர் வெளியேற பயன்படும் நீர்வழி பாதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், கழிவுகள், கட்டுமான குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இதனால் கால்வாயில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தினமும் சிலர் வாகனங்களில் கொண்டு வந்து இங்குள்ள கால்வாயில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் துர்நாற்றம் தாங்க முடியவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்றி, தூர்வார வேண்டும். மேலும் கால்வாயில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
