ஈரோடு, ஜூலை 28: காலை உணவுத்திட்டத்தில் பணியாற்றும் சமையலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காமராஜர் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காலை உணவுத்திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் காலை உணவு சமையலராக பணியாற்றி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முழு அர்ப்பணிப்புடன் எங்கள் பணியை செய்து வருகிறோம். தற்போது, காலை உணவு தயாரிக்கும் பணிக்காக டெண்டர் விடப்படவுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நீண்ட காலமாக பணியாற்றி வரும் சமையலர்களுக்கு பணி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையையும், எதிர்கால வாழ்வாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, எங்களின் நீண்ட கால சேவையையும் அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு தற்போது பணியாற்றி வரும் அனைத்து காலை உணவு சமையலர்களுக்கும் பணி நிரந்தரம் செய்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.இதேபோன்று, கதிரம்பட்டி அடுத்த புத்தூர் புதுபாளையம் ஜேஜே நகர சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு கடந்த 2017-2018ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், தற்போது எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்துக்கு புதிதாக பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பட்டா வாங்கிய நபர்கள், நாங்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்யுமாறு ரகளை செய்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவும், அந்த இடமும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
