×

தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க தொடர் உண்ணாவிரத போராட்டம்

 

நாமக்கல், ஜூலை 27: நாமக்கல்லில், தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவமனை மீட்பு குழு அறிவித்துள்ளது. நாமக்கல் -மோகனூர் ரோட்டில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புதியதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை நகரில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இதனால், ஏழை- எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறுவதில், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், புதியதாக தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

இதற்காக மருத்துவமனை மீட்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பழைய அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது, தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த சாதகமான பதிலும் வரவில்லை. அதே நேரம், பழைய மருத்துவமனை வளாகத்தில், தற்போது கீரம்பூரில் செயல்பட்டு வரும், அரசு மாதிரி பள்ளியை கொண்டு வருவதற்கான சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நாமக்கல் மாவட்ட மருத்துவமனை மீட்பு குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை குறித்து நாமக்கல்லில், மாவட்ட அரசு மருத்துவமனை மீட்பு குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் சர்வானந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு டாக்டர் சர்வானந்தா நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் காமராஜர் ஆட்சி காலத்தில், மோகனூர் ரோட்டில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. பின்னர், அது தாலுகா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்திய பின்னர், நகரில் இருந்து 10 கி.மீ., தொலைவிற்கு சென்றுவிட்டது. மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் தான் சுகாதார சேவை இருக்க வேண்டும். ஆனால், நாமக்கல்லில் மட்டும் விதிவிலக்காக மக்கள் அதிகம் வசிக்காத பகுதிக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் கொண்டு செல்லப்பட்டு விட்டது. இதனால், அரசு மருத்துவமனையை நம்பியுள்ள ஏழை -எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாமக்கல்லில் தாலுகா அரசு மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும்.

இந்த பிரச்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மீட்பு குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டங்கள் நாமக்கல்லில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளோம். நகரில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும். தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க கோரி, மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மக்கள் நலனுக்காக தான் அரசு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், மாவட்ட அரசு மருத்துவமனை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் வாசு சீனிவாசன், நிர்வாகிகள் ஏகாம்பரம், கார்த்திகேயன், விஸ்வநாதன், கமால்பாட்ஷா, பாண்டியன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : taluka government ,Namakkal ,Hospital Rescue Committee ,Government Medical College Hospital ,Namakkal-Mohanur road ,
× RELATED கடைகளில் சோதனை என்ற பெயரில் மிரட்டல்