×

ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி வந்தபோது சாலை தடுப்பில் மோதி கனரக வாகனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு

 

புழல்: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கனரக வாகனம் சாலை தடுப்பில் மோதி பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றிச்செல்லும் 4 கனரக வாகனங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டுச்சாலையில் வந்து நேற்று அதிகாலை சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியபோது, சாலையின் தடுப்பு சுவரில் மோதி வாகனம் பழுதாகி நின்றது.

ராட்சத இறக்கை ஏற்றிச்செல்லும் சுமார் 100 அடி நீளம் கொண்ட மிக நீளமான வாகனம் சாலையின் குறுக்கே பழுதாகி நின்றதால் செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டுச்சாலை, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போக்குவரத்து போலீசார், வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட்டனர்.

இதனால், சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்லும் நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியே இயக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, சாலையின் குறுக்கே பழுதாகி நின்ற வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். பின்னர் கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags : Puzhal ,Chennai-Kolkata National Highway ,Thiruvallur district ,Periyapalayam… ,
× RELATED சிவகாசி அருகே செங்கமலப்பட்டி...