×

மாஸ் காட்டும் பப்ளிமாஸ்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

பார்க்க ஆரஞ்சு பழத்தின் தோற்றம் கொண்ட இதன் பெயர் க்ரேப் ஃப்ரூட் (Grapefruit). பப்ளியாக இருக்கும் குண்டுக் குழந்தைகளை கிண்டலுக்காக குறிப்பிட பயன்படுவதும் இந்தப் பெயர்தான்..! அப்போதைய ஐரோப்பியர்களின் தடை செய்யப்பட்ட பழமாக வேறு இது இருந்துள்ளது.என்ன… ஆரம்பமே சரியில்லை எனத் தோன்றுகிறதா? அப்படிப்பட்ட குண்டு ஆரஞ்சு பழமான பப்ளிமாஸ் என்கிற க்ரேப் ஃப்ரூட்டைப் பற்றியே இந்த வார இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஆனால், அதன் எதிர்மறைக் காரணங்களுக்காக அல்ல… அதன் அற்புத பலன்களுக்காக. அதனுடைய வியத்தகு உபயோகங்களுக்காக.

மஞ்சள், வெள்ளை, பிங்க் மற்றும் அடர் சிவப்பு நிறச் சுளைகளுடன் காணப்படும் பப்ளிமாஸின் தாவரப்பெயர் Citrus paradisi. தோன்றிய இடம் ஜமய்க்கா.17ம் நூற்றாண்டில் ஜமய்க்காவில், ஆரஞ்சு மற்றும் பொமிலோ (Pomelo) எனும் சாத்துக்குடி வகையின் கலப்புத் தாவரமாக தோன்றியதே பப்ளிமாஸ். சற்றே பெரிதான இந்தோனேசிய பொமிலோ வகை ஆரஞ்சு பழத்தின் விதைகளை, கடற்பயணம் மேற்கொண்ட, கிழக்கிந்திய நிறுவனத்தின் கேப்டன் ஷாடாக், ஜமய்க்கா கொண்டு வந்து சேர்க்க, இயற்கையிலேயே கலப்புத் தாவரமாக உருவானதே இந்தப் பெரிய ஆரஞ்சு பழமான பப்ளிமாஸ்.

சரி… ஆரஞ்சு பழத்திற்கு ஏன் Grapefruit என்ற பெயர் வந்தது? திராட்சையை போலவே, கொத்துக்கொத்தாக, ஆனால், மரங்களில் காய்ப்பதால்தான் இதற்கு க்ரேப்-ஃப்ரூட் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஏடன் தோட்டத்தின் நன்மை, தீமைக்கான மரத்தை, இந்த பப்ளிமாஸ் மரம் மறைத்துவிட்டதால், இதனை தடை செய்யப்பட்ட மரம் (Forbidden Tree) என அப்போது அழைத்துள்ளனர்.இனிப்பும், புளிப்பும், அரைக் கசப்பும் சேர்ந்த தனிச்சுவையான பப்ளிமாஸை மஹாநிம்பு, சக்கோட்ரா, பம்பளிமாஸு, கம்பிளி-நாரன்னா, பாபனாஸ், சக்கோத்ரி என நமது மாநிலத்திலும், பொமிலோ, டொரஞ்ஜோ, அரபி-ஸாகர், ஷாடாக், பாம்பமெல்லொஸ், சிட்ரன்மெடிஸ் என பிற நாடுகளிலும் அழைத்தாலும், க்ரேப்-ஃப்ரூட் என்பதே புழக்கத்தில் இருக்கும் பெயராக இருக்கிறது.

குறைந்த கலோரி, நிறைந்த நீர்த்தன்மை மற்றும் அதிகளவு நார்ச்சத்து இவற்றுடன் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிரம்பியுள்ளதால், பப்ளிமாஸ் சிறந்ததொரு இயற்கை உணவாய் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வைட்டமின்கள் A, C, B1, B2, B5, B6, B9 நிறைந்த இந்தப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, பாஸ்ஃபரஸ் ஆகிய முக்கியத் தாதுக்களும், லைக்கோபீன், பீட்டா கரோட்டீன், நாரின்ஜெனின், லூட்டீன், பெக்டின்கள், ஃப்ளேவனாயிடுகள் போன்ற தாவரச்சத்துகளும் அதிகம் காணப்படுகின்றன. ஒரு பப்ளிமாஸ் பழம் மட்டுமே, ஒருநாளின் வைட்டமின் C தேவையை நூறு சதவிகிதமும், வைட்டமின் A தேவையை ஐம்பது சதவிகிதமும் நிறைவு செய்கிறது. இதன் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துகள், பிஎம்ஐ (BMI) எனும் உடல் நிறை குறியீட்டு எண்ணை குறைக்கவும் உதவுகிறது.

உடல் கொழுப்பை கரைக்கும் பழம் என்பதாலேயே மிகவும் பிரபலமடைந்த இதன் ஜூஸ், ‘ஹாலிவுட் டயட்’ எனவும், ‘வெயிட் லாஸ் டயட்’ எனவும் அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உடற்பருமன் குறைவதற்கான உணவாக மட்டுமன்றி, வயிற்று அழற்சி, மலச்சிக்கல், மூல நோய், சிறுநீர்த் தொற்று, ஆஸ்துமா மற்றும் கண் நோய்களிலும், வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய அடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள், குறிப்பாக குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கக் கூடும் என்கின்றன ஆய்வுகள்.

வைட்டமின் சி அதிகமுள்ள பப்ளிமாஸ், நீர் வறட்சியை குறைத்து நோயெதிர்ப்பை அதிகரிப்பதால், ஃப்ளூ, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட தொற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. தடிமனான பப்ளிமாஸ் பழத்தோலில் காணப்படும் அதிகளவு பெக்டின்கள், சரும அழகிற்காகவும், மற்ற பழங்களை பதனிடவும் பயன்படுத்தப்படுகிறது. தோலிலிருந்து பெறப்படும் Cold press oil எனும் எண்ணெய், மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், அரோமா தெரபியிலும் பயனளிக்கிறது. கசப்புச் சுவையுள்ள இதன் விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் சரும அழகிற்கான வெளிப்பூச்சாகவும், தோல் அழற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை சிறப்புகள் நிறைந்த இந்த பப்ளிமாஸ் பழத்தை கவனமாகவும் கையாள வேண்டும். ஆம், அலோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டாட்டின்ஸ், கால்சியம் சானல் ப்ளாக்கர்ஸ், அமியோடரான் போன்ற கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களும், ஸ்டீராய்டு அல்லது அலர்ஜி மருந்துகளை உட்கொள்பவர்களும், பப்ளிமாஸ் பழத்தைத் தவிர்ப்பதே நல்லது.

இதில் காணப்படும் ஃப்யூரனோ-க்யூமாரின்கள் மேற்குறிப்பிட்டுள்ள மருந்துகளுடன் இடைவினை புரிவதால், மருந்துகளின் பலன்களை குறைத்து, பக்க விளைவுகளை கூட்டுகின்றன. மேலும், இதிலுள்ள சில தாவரச்சத்துகள், தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமையை சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீண்ட நேரம் வெயிலில் பணிபுரிவோர் பப்ளிமாஸ் பழத்தை தவிர்த்தல் நல்லது.நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும் இந்தப் பழத்தை நேரடியாகவோ, ஜூஸ், ஜாம், சாலட், மெர்மலேட், ஸ்மூத்தி, ஐஸ்கிரீம் வடிவிலோ உட்கொள்ளலாம். இதன் சுளைகளில் ரம், வைன், வோட்கா, காக்டெயில் உள்ளிட்ட மதுபானங்கள் தயாராகின்றன.

விதைகள், பதியன்கள் மூலமாக விளையும் பப்ளிமாஸை சீனா, வியட்நாம், அமெரிக்கா, மெக்சிகோ, இஸ்ரேல், தென்னாப்பிரிக்க நாடுகள் அதிகம் விளைவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், ரெட் ரூபி அதிகமாக விளைவதுடன், அதன் மாகாணப் பழமாகவும் இது திகழ்கிறது.நமது நாட்டில் தாமதமாய் அறிமுகமான பப்ளிமாஸ் பஞ்சாப், ஹரியானா, நீலகிரி மாவட்டங்களில் அதிகம் விளைகிறது. ஏறத்தாழ 4 முதல் 7 வருடங்கள் கழித்து காய்ப்புக்கு வரும் இந்தப் பழங்கள், ஆரஞ்சு, பிங்க், சிவப்பு மற்றும் வெளிர் மஞ்சள் நிறங்களில், ரெட் ப்ளஷ், ரூபி, செசிலி, மார்ஷ் எனும் வகைகளாக கிடைக்கிறது.

ஆரஞ்சு, சிவப்பு நிற பப்ளிமாஸ் பழத்தில் ஆங்காங்கே தோன்றும் ரோஸ் நிறத்திட்டுகளை, ‘சூரியன் முத்தமிட சிவந்த பழம்…’ என்று கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். சொர்க்கத்தின் மரமாக கொண்டாடியுள்ள இதனை, பிப்ரவரி மாதத்தின் சிறப்பு பழம் எனவும் போற்றுகின்றனர்.

அனைத்து விதத்திலும் இப்படி ‘மாஸ் காட்டும் பப்ளிமாஸை…’, ‘குண்டு பப்ளிமாஸ்’ என இகழாமல், முழுமையாகப் பயன்படுத்தி பயன் அடைவோம்.

(இயற்கைப் பயணம் நீளும்…)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்

Tags : Kumkumam Dozhi ,Europeans ,
× RELATED ஆல்யா மானசா ஃபிட்னெஸ் ரகசியங்கள்!