நன்றி குங்குமம் டாக்டர்
சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு என்பது ஒருவர் விரும்பாமலேயே சிறுநீர் கசிவு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனை ஆகும். இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் பாதிக்கக்கூடியது. இருமல், தும்மல், சிரிப்பு, உடற்பயிற்சி போன்ற நேரங்களில் சிறுநீர் கசிவது முதல், திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசர உணர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை வரை பல வகைகளில் இது வெளிப்படலாம்.
பலர் இதை வயது மூப்பின் இயல்பான மாற்றம் என நினைத்து சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர். ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை முறைகள் மூலம் இந்தப் பிரச்சனையை கட்டுப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்கிறார் சிறுநீரக மகளிர் நல நிபுணர் மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் மீரா வி.வி. ராகவன். இது குறித்து அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவைசிறுநீர் கட்டுப்பாடு இழப்பு (Urinary Incontinence) என்பது தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது.
இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் பலர் இதைப் பற்றி பேச தயங்கி, வயது அதிகரிப்பின் இயல்பான விளைவு என்றும் அல்லது வெளியில் சொன்னால் கேலியாக நினைப்பார்களோ என்று கருதியும் அமைதியாகவே பாதிப்பை அனுபவிக்கின்றனர். ஆனால், இது எல்லோருக்கும் வயது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை.
நமது சிறுநீர் கட்டுப்பாடு என்பது சிறுநீர்ப்பைக்கும் மூளைக்கும் இடையிலான ஒரு முக்கியமான தொடர்பைப் போன்றது. சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைத்துக் கொண்டு, அது நிரம்பும்போது மூளைக்கு தகவல் அனுப்புகிறது. பின்னர் மூளை அந்த நேரம் மற்றும் இடம் சரியானதா என்பதை முடிவு செய்து சிறுநீரை வெளியேற்ற அனுமதிக்கிறது. இந்த தொடர்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், சிறுநீர்ப்பைக்கும் மூளைக்கும் இடையிலான ஒத்திசைவு பாதிக்கப்படலாம்.
இப்படி ஒத்திசைவு பாதிக்கும்போது, இதுபோன்ற சிறுநீர் கட்டுப்பாடின்மை ஏற்படலாம். மேலும், சிலருக்கு அதிக செயல்படும் சிறுநீர்ப்பை (Overactive Bladder) ஏற்படலாம். இதில் சிறுநீர்ப்பை மிக விரைவாகவே அவசர சிக்னல்களை அனுப்புவதால், திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு கசிவும் ஏற்படுகிறது.
ஒருசிலருக்கு இடுப்பு தசைகள் (Pelvic Floor Muscles) பலவீனமடைவதால் இந்தப் பிரச்சனை உருவாகலாம். குறிப்பாக குழந்தைப்பேறு, வயது மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்த தசைகள் பாதிக்கப்பட்டால், இருமுதல், தும்முதல், சிரித்தல் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.மேலும் நீரிழிவு நோய், பக்கவாதம், பார்கின்சன் நோய் போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் மற்றும் சில மருந்துகளும் சிறுநீர் கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும்.
ஆனால் நம்பிக்கை தரும் விஷயம் என்னவென்றால், சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு சிகிச்சையளிக்கக்கூடிய பிரச்சனைதான். வாழ்க்கைமுறை மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகள், இடுப்பு தசை பயிற்சிகள் (Kegel Exercises), மருந்துகள் மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் இந்த பாதிப்புகளை கணிசமாக குறைக்க முடியும். முக்கியமாக, இந்த பிரச்சனையை மறைத்து தனியாக போராட வேண்டிய அவசியமில்லை.
சிறுநீர் கசிவு என்பது வயதாவதால் தவிர்க்க முடியாத விளைவு அல்ல; அது வெட்கப்பட வேண்டிய விஷயமும் அல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை அல்லது சுதந்திரத்தை சிறுநீர் பிரச்சனை பாதிக்கத் தொடங்கினால், மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரோக்கியமான சிறுநீர்ப்பை என்பது சிறுநீரை சேமிப்பதற்கான உறுப்பு மட்டுமல்ல; அது ஒருவரின் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் முழுமையான நலனுடன் தொடர்புடையது. எனவே, எந்தவித அச்சமோ, கூச்சமோ இல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்
