மன்னார்குடி, ஜூலை 21: பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் பாமணி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் அதன் தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு செய்யப் பட்டது. இந்த நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு தவெக அரசு தற்போது அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பாரபட்சமின்றி அனைத்து கூட்டுறவு கடன் சங்க கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தவெக தனது தேர்தல் கால வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடியில் இயங்கும் பாமணி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சதாசிவம் தலைமைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஐ ஒன்றிய செயலாளர் துரை அருள்ராஜன், நகர செயலாளர் கலியபெருமாள், ஏஐடியூசி தலைவர் நாகேஷ், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிமலை, வி.தொச ஒன்றிய துணை தலைவர் ரெத்தினவேல், ராஜேந்திரன், ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
