நாகப்பட்டினம்,ஜூலை 21: வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க வேளாண் கூட்டுறவுசங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனை இன்றி தமிழக அரசு தள்ளுபடி செய்ய கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமருகல் அருகே நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மாசிலாமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கையன், மாவட்ட பொருளாளர் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன்,இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடக்க வேளாண் கூட்டுறவுசங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனை இன்றி தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேபோல் திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமையிலும், திருக்கண்ணபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் எதிரில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையிலும், திருமருகலில் தங்கையன், ரமேஷ் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது
