செவிலிமேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பையில் இருந்து தயாரிக்கும் இயற்கை உரம் தேக்கம்

காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் தேக்கமடைந்துள்ள நிலையில், அதனை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அடிப்படை வசதிகளான குப்பை மற்றும் கழிவுநீர் உடனுக்குடன் அகற்றுதல், மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரும் வகையில் நான்கு மண்டலாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் – செவிலிமேடு பகுதியில் 4வது மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. காய்கறிகள், பழங்களின் கழிவுகள் தரம் பிரித்து அகற்றப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது, இங்கிருந்து உற்பத்தியாகும் உரங்கள் தேங்கி நிற்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்களின் உழைப்பு வீணாகி வருகிறது.

இங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் காஞ்சிபுரம் மாநகர அதிகாரிகள் வழங்காமல் உள்ளனர். கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், ஆய்வுக்கு வரும்போது மட்டும் கையுறைகள் மட்டும் வழங்கப்படுகிறது. ஆகவே, நம்முடைய சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு திட்டங்கள் எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு அவசிய தேவைகளான கை உரை வழங்கப்படாமல் உள்ளதால் வெறும் கைகளில் கழிவுகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பையில் இருந்து தரம் பிரித்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள், தற்போது தேங்கி கிடக்கிறது. மாநகராட்சிக்கு வருவாய் வருகின்ற உரங்கள் தேக்கமடைய காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கண்டறிய வேண்டும். மலைபோல் குவிந்துள்ள இயற்கை உரத்தை விற்பதற்கான மாற்று நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Related Stories: