×

சட்ட விரோத கட்டுமானம் என கூறி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கட்சி அலுவலகம் இடிப்பு: பாஜ அரசு நடவடிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜியின் 5 மாடி கட்சி அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. மேற்குவங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. இவர் டைமன்ட் ஹார்பர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதியில் உள்ள அம்டாலா பகுதியில் அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலகம் 5 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்டங்கள் இன்றி, விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அபிஷேக் பானர்ஜியின் கட்டிடம் நேற்று இடிக்கப்பட்டது. நேற்று காலையில் இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், காவல் துறையினர் மற்றும் மத்திய படை பிரிவினர் உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்தை சுற்றி வளைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அலுவலகத்தின் முன்பகுதியில் இருந்த கொட்டகைகள் முதலில் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கட்டிடத்தின் முன்பகுதிகள் இடிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் அவசர சேவை பிரிவினர் அங்கு நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “கட்டுமான விதிமுறைகளை மீறியதாக புகார்கள் வரவே, பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் தேவையான நடைமுறைகளை பின்பற்றி அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதற்கும், அரசியல் காரணங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்றனர்.

Tags : Trinamool Congress ,BJP ,Kolkata ,Abhishek Banerjee ,West Bengal ,Chief Minister ,Trinamool Congress Party ,Mamata Banerjee ,Diamond Harbour… ,
× RELATED வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது;...