சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற தவெக எம்எல்ஏ, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது, ெபாதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள், பள்ளிகளில் சென்று தேவையில்லாத ஆய்வு செய்வது, பள்ளி மாணவர்களிடம் கேள்வி கேட்பது போல் ரீல்ஸ் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். இதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி தவெக எம்எல்ஏ கஜேந்திரன், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்றுள்ளார். அங்கு மாணவர்களிடம் கேள்வி கேட்பது போலவும், அறிவுரை வழங்குவது போலவும் ரீல்ஸ் எடுத்து, அதில் முதல்வர் விஜய் நடித்த படத்தின் பாடலை சேர்த்து தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதே போல், பெரும்பாலை அருகே அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து, 11 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, பெரும்பாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை நலம் விசாரிக்க சென்ற எம்எல்ஏ கஜேந்திரன், குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவது, குழந்தைகளிடையே பேசுவது, ஆறுதல் கூறுவது, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விசாரிப்பது போன்ற ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தற்போது தொகுதி மக்களிடையே சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. பள்ளிகளில் ஆய்வு செய்து ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட கூடாது என்று முதல்வர் கூறி, சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன், இதுபோல் செயல்களில் ஈடுபட்டு வருவது, பொதுமக்கள் மட்டுமின்றி கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
