×

பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயில் நில முறைகேடு வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், நிலத்தை வாங்கிய பழனி சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த மூவருடன் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனியில் உள்ள அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அளித்த மனுவில் அவருக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலத்தை பாலசுந்தரம் என்ற பதிவாளர் 3ம் தேதியே பதிவு செய்துவிட்டார். அப்போதே 90% பணிகள் முடிந்துவிட்டன. ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு பத்திரப்பதிவுக்கு வைக்கப்பட்டுவிட்டது. அவர் விடுமுறையில் சென்றதால் ஜஸ்டின் மணிகண்டன் அதற்கு டோக்கன் மட்டும் ஒதுக்கி பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஆனால், அரசு திட்டமிட்டு மணிகண்டனை மட்டும் குற்றவாளி ஆக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளது. எங்களுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். நில முறைகேடு பத்திரப் பதிவு ஜூலை 3 ஆம் தேதியே செய்ததாக அரசுத் தரப்பு கூறியதையடுத்து, பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் 2 சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? சார்-பதிவாளர்கள் பாலசுந்தரத்தை ஏன் வழக்கில் இணைக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பி ஜஸ்டின் மணிகண்டனுக்கு ரூ. 15,000 வைப்புத்தொகை, காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

Tags : PALANI RS ,MUNJAMIN ,JUSTIN MANIKANTAN ,Palani Murugan Temple ,Rs ,Chennai High Court ,Madurai Branch ,Justin Manikandan ,Palani Temple ,
× RELATED சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு