×

பிளாஸ்டிக் முதல் சோப் வரை அபாயமாகும் ரசாயனங்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘உங்கள் டூத் பேஸ்டில் உப்பிருக்கிறதா..?” என்று ஒரு விளம்பரத்தில் கேட்பார்கள். அதுபோலவே இப்போது, ‘‘உங்கள் சன் ஸ்கிரீனில் எண்டோகிரைன் டிஸ்ரப்டார்ஸ் இருக்கிறதா..?” என்று கேட்க வேண்டிய சூழலில் உள்ளோம்.இன்று நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மட்டுமில்லாமல், தினசரி வீட்டில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் கழுவும் சோப்பு, நறுமணத்திற்கு பயன்படும் பொருட்கள் என ஒவ்வொன்றிலும் மறைமுகமாக ஆபத்து நிறைந்திருக்கிறது. ஆகவே, எண்டோகிரைன் டிஸ்ரப்டார்ஸ் (Endocrine Disruptors) என்றால் என்ன? அதனால் வரக்கூடிய பாதிப்புகள் யாவை? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது? என்பது அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.
நாளமில்லா சுரப்பிகள்…

நாளமில்லா சுரப்பிகள் (Endocrine Glands) உடலுக்குத் தேவையான பல முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. அதாவது, தைராய்டு (Thyroid), கணையம் (Pancreas), கருமுட்டை பை (Ovaries), விந்தணு பை (Testes) முதலான மொத்தம் எட்டு இருக்கிறது. நாளமில்லா சுரப்பிகள் நம் உடலில் இருக்கிறது. நம் மூளை முதல் அடிவயிறு வரை இருக்கும் இந்த சுரப்பிகளுக்கு நாளம் இல்லை (குழாய் போன்ற வழி) என்பதால் நேரடியாக ரத்தத்திலேயே ஹார்மோன்கள் கலந்து உடலில் பரவுகிறது.

பயன்கள்…

ஈஸ்ட்ரோஜன் (Estrogen), தைராய்டு, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone), கார்டிசால் (Cortisol) என பல முக்கிய ஹார்மோன்களை இச்சுரப்பிகள்தான் சுரக்கிறது.நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் நேரடியாக நம் உடல் வளர்ச்சியை, இனப்பெருக்கத்தை, வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) பாதிக்கிறது. இது மட்டுமில்லாமல் நம் ஆற்றல் அளவுகளையும் (Energy), சுண்ணாம்புச் சத்தின் அளவுகளையும், நம் மனநிலை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, பூப்பெய்துதலின் வயது, தூக்கத்தின் நிலைகள் என பல்வேறு விஷயத்தில் ஹார்மோன்களை உற்பத்தி செய்து பங்கு வகிக்கிறது.

எண்டோகிரைன் டிஸ்ரப்ஷன்…

நாளமில்லா சுரப்பிகளில் இருந்து ஹார்மோன்கள் வெளியாவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுவதே ‘எண்டோகிரைன் டிஸ்ரப்ஷன்’ (Endocrine Disruption) என்று கூறுவர். இந்த சுரப்பிகள் வெளியிடும் ஹார்மோன்கள் மாதிரியே ரசாயனங்கள் சுரந்து அந்த ஹார்மோன் போலவே வேலை செய்வது, ஹார்மோன்களின் அளவுகளில் பாதிப்பு ஏற்படுவது, ஹார்மோன் சுரக்க முடியாமல் தடுப்பு ஏற்படுவது, ஹார்மோன் அதிகமாக சுரப்பது, குறைவாக சுரப்பது என பல வகையான சிக்கல்கள் இருக்கிறது. இதனை இயற்கையாக வருவது, மனிதராகவே ஏற்படுத்திக் கொள்வது என இரண்டாகப் பிரிக்கலாம்.

1. இயற்கையாக வருவது…

பிறவியிலேயே ஹார்மோன் பாதிப்பு இருப்பது, மரபணுவில் இருப்பது, ஆட்டோ இமியூன் (AutoImmnune) அதாவது, தன் உடலை தானே தாக்கும் நோயாக இருப்பது, சுரப்பிகளில் புற்று நோய் வருவது.ஆனால், இவை வெகு சிலருக்குதான் ஏற்படுகிறது.

2. மனிதனாக ஏற்படுத்துவது…

மனிதனாக உருவாக்கிக் கொள்வதில் தான் அதிக நபர்களை பாதிக்கிறது. காற்று மாசு, நாம் பயன்படுத்தும் வாசனை திரவியம், சன் ஸ்கிரீன், லோஷன், துணி துவைக்கும் சோப்பு, பாத்திரம் கழுவும் சோப்பு, காய்கறி பழங்களின் மேல் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உணவுப் பொருட்களை வைக்கும் நெகிழி டப்பாக்கள் மற்றும் வீடு, கார் என நாம் பயன்படுத்தும் வாசனை திரவிய பொருட்கள் (Air Freshner), கடைகளில் கொடுக்கப்படும் கணினி ரசிதுகளில் இருக்கும் ‘மை’ என அனைத்திலும் உள்ள ரசாயனங்கள் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கிறது.

அறிகுறிகள்…

* தொடர்ச்சியாக உடல் சோர்வாக இருப்பது.

* உடல் எடையில் மாற்றம் இருப்பது. அதிகமாவது அல்லது குறைவது.

*அடிக்கடி மனநிலையில் மாற்றம் ஏற்படுவது (Mood swings).

*பதட்டம், மன அழுத்தம் இருப்பது.

*எளிதாய் கோபப்படுவது.

*முறையற்ற மாதவிடாய் சுழற்சி.

*தசை பலவீனமாக (Muscle Weakness) இருப்பது.

*தலைமுடி உதிர்வது.

*உடலில் அதிகம் முடி வளர்வது. உதாரணத்திற்கு, தாடையில் அதிகம் முடி வளர்வது.

*வறட்சியான சருமம்.

*மலச்சிக்கல்.

*முழுமையான தூக்கம் இல்லாமல் இருப்பது.

*ரத்த சர்க்கரை அளவு அதிகமாவது.

*இனிப்பு உணவுகளின் மேல் ஆர்வம் அதிகரிப்பது.

*இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் உணவுகளை கொறித்துக்கொண்டே இருக்க வேண்டும் என உந்துதல் ஏற்படுவது.

விளையும் விளைவுகள்…

குழந்தையின்மை, உடல் பருமன், நீரிழிவு நோய், பக்கவாதம், இதய அடைப்பு, அதிகரித்த உடல் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, முன்பாக அல்லது தாமதமாக பூப்பெய்துதல், கொழுப்பு படிந்த கல்லீரல். தொடர்ந்து நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கப்பட்டால் இவ்வகை விளைவுகள் நிகழும் வாய்ப்புள்ளது.

தடுக்கும் வழிமுறைகள்…

*வாழ்வியல் மாற்றங்கள், உடற்பயிற்சி, உணவு முறைகள் இவை மூன்றையும் மாற்றியமைத்தாலே இதுபோன்ற சூழல்களில் நாம் சிக்காமல் இருக்கலாம்.

*தினசரி பயன்பாட்டிற்கு நெகிழிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். எவர்சில்வர், கண்ணாடி போன்ற பாத்திரங்களை பயன்படுத்தலாம். வீட்டில் சமையல் எண்ணெய், நெய் ஊற்றி வைப்பதற்கு நிச்சயம் நெகிழி டப்பாக்களை பயன்படுத்தக் கூடாது.

*கடைகளில் நெகிழி டப்பாக்களில் தரும் சூடான உணவுகளை தவிர்க்கலாம்.

*காய்கறிகளையும், பழங்களையும் சுத்தமாகக் கழுவி அலசிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

*நாம் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் ரசாயனங்களின் பெயர் பட்டியலை ஒருமுறை பார்த்து அதை பயன்படுத்தலாமா என்பதை உறுதிப்படுத்தி பயன்படுத்துதல் அவசியம்.

*வீட்டிற்காக வாங்கப்படும் வாசனை திரவியப் பொருட்கள், சோப் என அனைத்திலும் அதேபோல் உடலை பாதிக்கும் ரசாயனங்கள் இருக்கிறதா என்பதனை பரிசோதனை செய்த பின்பே வாங்க வேண்டும்.

*தினசரி உடற்பயிற்சிகள் கட்டாயம் செய்ய வேண்டும். உடற்பயிற்சி ஹார்மோன் உற்பத்தியை சீர்படுத்துகிறது.

* தினசரி நடவடிக்கைகளில் உடல் உழைப்பு தரும் வகையில் ஈடுபடுவது.

*இனிப்பு உணவுகளை தவிர்ப்பது.

*புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, நல்ல கொழுப்பு சத்துக்களான தேங்காய், வேர்க்கடலை, மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது.

*தினசரி சூரிய ஒளியில் நிற்பது.

*மன அழுத்தம், பதட்டம் குறைவதற்கு ஏதேனும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற பல நடவடிக்கைகளின் மூலம் நாம் இத்தகைய பாதிப்பிலிருந்து மீளலாம்.
இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

நாளமில்லா சுரப்பிகளுக்கும் இயன்முறை மருத்துவத்திற்கும் நேரடியாக பங்கு இல்லை என்றாலும், மறைமுகமாக உடற்பயிற்சிகள் உதவி செய்கிறது. உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் இவ்வகையான பிரச்னைகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், இதிலிருந்து எளிதில் வெளிவரவும் நம்மால் முடியும். எனவே, அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகினால், அவர் பரிசோதனை செய்து உடற்பயிற்களை பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர்.

மேலும், உணவியல் நிபுணரையும், பொது மருத்துவரையும் ஆலோசித்து என்னென்ன பொருட்களை நம் தினசரி வாழ்வில் இருந்து நீக்கலாம், என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் போன்ற அத்தியாவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.மொத்தத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களை இன்றிலிருந்து சரி பார்த்து வாங்கத் தொடங்குவோம். கூடவே, நம் வாழ்வியல் முறையை மாற்றியமைத்து உடல் நலனையும், உலக நலனையும் பாதுகாப்போம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

Tags : Kumkum ,
× RELATED தடுமாற்றம் இல்லா பயணம் விழுதலைத் தவிர்ப்போம்!