×

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம் – ஈரானிடம் இந்தியா வலியுறுத்தல்

டெல்லி: ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறுகையில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உலகெங்கிலும் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நீரிணையில் நடைபெறும் வர்த்தக போக்குவரத்து சுமுகமாக இருப்பது மிக அவசியமாகும்.

ஈரானின் தூதரகத் துணைத் தலைவரை நேரில் வரவழைத்து நாங்கள் நடந்த சம்பவங்கள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும், அவற்றை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதையும் அவர்களிடம் தெரிவித்தோம். ஈரான் தாக்குதலில் ஒரு மதிப்புமிக்க இந்தியரின் உயிர் பறிபோனது; மேலும் பல இந்தியர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று எடுத்து கூறி இந்தியாவின் கண்டனங்களை பதிவு செய்தோம்.

மேலும் இது போன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஈரானியத் தரப்பிடம் எங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதே நேரம் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்; மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இரு தரப்பினரும் உறுதியான பேச்சுவார்த்தைக்கு வந்து, உரிய முறையில் பேசி பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதையும் எடுத்துரைத்தோம் என்றார்.

Tags : India ,Iran ,Strait of Hormuz ,Delhi ,Union External Affairs Ministry ,Randhir Jaiswal ,West Asia ,
× RELATED அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு...