×

அரேபிய கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; இந்திய கப்பல் ஊழியர் பலி: ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

அபுதாபி: ஓமன் கடல் பகுதியில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். ஈரான் தனது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மூலம் ஹார்முஸ் நீரிணையை மூடியதால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டின் 140 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல் போக்குவரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா கடல்சார் முற்றுகையை அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஹார்முஸ் ஜலசந்தியில் மேற்கொள்ளப்படும் இந்த கடற்படை முற்றுகையானது ஈரானையும், ஈரானுடன் வணிகம் செய்யும் நபர்களையும் மட்டுமே குறிவைக்கும். மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த வியூகம் சார்ந்த கடல்வழிப் பாதையை பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை’ என்று கூறினார். இந்நிலையில் ஓமன் நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு கப்பல் போக்குவரத்து பாதையில் சென்று கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் மொம்பாசா மற்றும் அல் பாகியா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் நாட்டு ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த கொடூர தாக்குதலில் மொம்பாசா கப்பலில் பணியாற்றி வந்த இந்திய ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 இந்தியர்கள் மற்றும் 2 உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலால் இரண்டு கப்பல்களிலும் கடும் தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வணிக கப்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதும், ஹார்முஸ் ஜலசந்தியை பொருளாதார அச்சுறுத்தலுக்காக பயன்படுத்துவதும் கடல் கொள்ளைக்கு சமமான செயலாகும். உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருக்கும், இந்திய ஒன்றிய அரசு மற்றும் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Arabian Sea ,UAE ,Iran ,Abu Dhabi ,United Arab Emirates ,Gulf of Oman ,Strait of Hormuz ,Islamic Revolutionary Guard ,United ,States ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...