அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பாஹியா’ ஆகிய இரு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தை சர்வதேச சட்ட மீறல் எனக் கண்டித்துள்ள அமீரக பாதுகாப்பு அமைச்சகம், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இப்பிரச்சினையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7.8% உயர்ந்து பேரல் 81.92 டாலராக ஆகியுள்ளது. ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கடல்வழி முற்றுகை கொண்டு வரப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
