×

உலக கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ்-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

 

டாலஸ்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதியில் பிரான்ஸ் ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன. அமெரிக்காவின் டாலஸ் அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30க்கு தொடங்குகிறது. நடப்பு உலக கோப்பையின் லீக் சுற்றில் ஐ பிரிவில் இடம் பெற்றிருந்த பிரான்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அடுத்து ரவுண்ட் ஆப் 32ல் ஸ்வீடன் அணியை 3-0, ரவுண்ட் ஆப் 16ல் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அந்த அணி காலிறுதியில் மொராக்கோவை 2-0 என பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. எச் பிரிவில் ஸ்பெயின் அணி 2 வெற்றி 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியா (3-0), போர்ச்சுகல் (1-0), பெல்ஜியம் (2-1) அணிகளின் சவாலை முறியடித்த ஸ்பெயின், அரையிறுதியில் இன்று பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை சந்திக்கிறது, பிரான்ஸ் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே, ஸ்பெயினின் லாமின் யமால் இருவருக்கும் இடையேயான போட்டியாகவும் மாறியிருக்கும் முதல் அரையிறுதி கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ரியல் மாட்ரிட் பார்சிலோனா கிளப் அணிகளுக்காக இவர்கள் பல முறை மோதியிருந்தாலும், உலக கோப்பையில் யார் சிறப்பாக செயல்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிரான்ஸ் அணியில் எம்பாப்பே இதுவரை 8 கோல், 3 அசிஸ்ட் உடன் கோல்டன் பூட் ரேசில் முன்னிலை வகிக்கிறார். அவருடன் உஸ்மான் டெம்பெலே (5 கோல்), மைகேல் ஓலிஸ் (5 அசிஸ்ட்) ஆகியோரும் அசத்தக் காத்திருக்கிறார்கள். ஸ்பெயின் தரப்பில் மைகேல் ஒயர்ஸபால் (4 கோல்), மைகேல் மொரினோ (2 கோல்), மார்க் குகுரெல்லா (2 அசிஸ்ட்), லாமின் யமால் (1 கோல்) ஆகியோர் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆப்டா சூப்பர்கம்ப்யூட்டர் கணிப்பின்படி பிரான்ஸ் அணிக்கு 42.1 சதவீதமும், ஸ்பெயின் அணிக்கு 31.8 சதவீதமும் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்ல 26.1% வாய்ப்புள்ளது.

* போட்டி நடைபெற உள்ள டாலஸ் அரங்கில் 70,649 இருக்கை வசதி உள்ளது. நடப்பு தொடர் 16 நகரங்களில் நடைபெற்ற நிலையில், டாலஸ் அரங்குக்கே அதிகபட்சமாக 9 போட்டிகள் ஒதுக்கப்பட்டது.
* ஸ்பெயின் பிரான்ஸ் அணிகள் இதுவரை 38 முறை மோதியுள்ளதில் ஸ்பெயின் 18, பிரான்ஸ் 13ல் வென்றுள்ள நிலையில், 7 போட்டிகள் டிராவில் முடிந்தன.
* கடைசியாக மோதிய யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் 2025 அரையிறுதியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது.
* உலக கோப்பையில் இந்த அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதியுள்ளன. 2006 தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் பிரான்ஸ் 3-1 என வெற்றியை வசப்படுத்தியது.

* ஐரோப்பிய ஜாம்பவான்களான இரு அணிகளும் யூரோ சாம்பியன்ஷிப்பில் 5 முறை மோதியுள்ளதில் 2-2 என சமநிலை வகிக்கின்றன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.
* உலக கோப்பையை பிரான்ஸ் அணி 2 முறையும் (1998, 2018), ஸ்பெயின் அணி ஒரு முறையும் (2010) வென்றுள்ளன.
* யூரோ சாம்பியன்ஷிப்பில் பிரான்ஸ் 2 (1984, 2000), ஸ்பெயின் 4 முறை (1964, 2008, 2012, 2024) கோப்பையை கைப்பற்றி உள்ளன.
* ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஸ்பெயின் 2 முறையும் (1992, 2024), பிரான்ஸ் ஒரு முறையும் (1984) முத்தமிட்டுள்ளன.

Tags : France ,Spain ,World Cup semi-final ,Dallas ,FIFA World Cup football ,Dallas Stadium ,United States ,World Cup… ,
× RELATED இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான...