வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், 31 பேருக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான ஆணையை கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையையும் வழங்கியுள்ளார். கருணையை மட்டும் அளவீடாக கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும் தேவையானவை என்பது தான் எங்களது நிலைப்பாடு.

இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 1987ம் ஆண்டு காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான்.

41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாமக விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன; அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டி கழிக்க முடியாது. அவர்களுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

Related Stories: