×

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

திருவண்ணாமலை

பகுதி 6

வஜ்ராங்கத பாண்டியன் வேட்டைக்குக் குதிரை மேல் ஏறிச் சென்ற போது, வழியில் புனுகுப் பூனையைக் கண்டு அதைத் துரத்த, அது மலையை வலமாக ஓடிச் சென்று கீழே விழுந்து உயிர் துறந்தது. வேகமாகச் செலுத்தப்பட்ட குதிரையும் விழுந்து மடிந்தது.

இறந்த புனுகுப் பூனையும் குதிரையும் மலையைக் கால்களால் வலம் வந்த காரணத்தால் திவ்ய தேகம் பெற்று மீண்டும் வித்யாதரர்கள் ஆயின. அரசனைப் பார்த்து, “நீ காலினால் அருணாசலத்தைப் பிரதட்சணம் செய்யாமல் குதிரையின் மீது ஏறி வந்த பாவம் நீங்க, இறைவனைப் பூஜை செய்வாயாக” என்று கூறினார்கள். அதன்படியே நடந்து மலைவலம் வந்த பாண்டியன், அண்ணாமலைக்குப் பல திருப்பணிகள் செய்து இந்திர பதவி அடைந்தான் என்பது அருணாசல புராணம்.

மலைவலப் பாதையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், மலையின் மேற்குப் பகுதியிலுள்ள அணி அண்ணாமலைக் கோயில் [அடி அண்ணாமலை என்றும் கூறுவர்] கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். இக்கோயில் அண்ணாமலையார் கோயிலுக்கு முந்தையது என்றும் ஆதி அருணாசலம் எனும் பெயருடையது என்றும் கூறப்படுகிறது.

‘‘ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்; ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!” என்ற வேண்டுதலை முன் வைக்கும் ‘‘ஏறுமயில்” எனத் தொடங்கும் பிரபலமான பாடல், இங்கு நினைவுகூரத்தக்கது.

பிரம்மதேவர் தன்னால் படைக்கப்பட்ட திலோத்தமை என்ற பெண் மீது மோகம்கொண்டு அவள் பின்னால் ஓடித் திரிந்தார். சிவதரிசனம் கிடைக்கப்பெற்று, அவனருளால் மோகம் அடங்கியது. இவ்விடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்.கருவறையில் சிவலிங்கத் திருமேனி உள்ளது. அம்பிகை உண்ணாமுலையம்மை, தனிக் கோயிலில் உள்ளார். பிரதான வாயிலை அடுத்து வடபக்கம் பழநி ஆண்டவர் சந்நதி உள்ளது. இங்கு ஒரு பழநித் திருப்புகழைச் சமர்ப்பிக்கின்றோம்.

“வசனமிக ஏற்றி மறவாதே
மனது துயராற்றில் உழலாதே
இசைபயில் ஷடாக்ஷரம் அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநி மலை வீற்றருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர்சிறை மீட்ட பெருமாளே.”

[மனத்தில் உருவேறும்படி உன் நாமத்தை ஜெபித்து, அதன் மூலம் உன்னை மறவாதிருக்கவும், துயரம் தரும் மார்க்கங்களில் மனம் திரியாமலிருக்கவும், முறைப்படி பயில்கின்ற ஷடாக்ஷர மந்திரத்தின் அருட்பயனாக, இம்மையிலும் மறுமையிலும் அடியேனுக்கு நல்வாழ்வை அருள்வாயாக. சிவனார் அருளிச் செய்த வேத சிவாகமங்களை அறிந்தவனே! பழநிமலையில் குடியிருந்து அருளும் வேலவா! அசுரர் கூட்டங்களை ஒடுக்கி, தேவர்கள் நன்றாக வாழுமாறு சிறையினின்று மீட்டருளிய பெருமாளே!]

அப்பர் பெருமான் தம் பாக்களில் ஏழு முறை அணி அண்ணாமலையைக் குறிப்பிட்டுள்ளார். திருவெம்பாவை, திருவம்மானைப் பாக்களை மாணிக்கவாசகர், இத் தலத்தில் பாடியுள்ளார் என்பதால், அவருக்கென்று தனிக் கோயிலும் இங்கு உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் அணி அண்ணாமலைக் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

“அரிவையொரு பாகமான அருணகிரிநாதர் பூசை
அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர் குல காலனாகும் அரிய தவ ராஜராஜன்
அவனி புகழ் சோமநாதன் மட மேவும் முருக”

[சோமநாதன் மடம் திருப்புகழ்}

[ஆரணி தாலுக்காவிலுள்ள புத்தூரில் சோமநாதன் மடம் உள்ளது]
“அண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமம் தவறாது பூஜை செய்து வந்தவரும், அமணர் குலத்தைக் கண்டித்தவரும், அரிய தவ ராஜராஜராக விளங்கியவரும், பெரும் புகழ் பெற்றவருமான சோமநாதன் என்பவர் புத்தூரில் தமக்கு உரிய ஒரு மடத்தில் முருகவேளை வழிபட்டு வந்தார். புத்தூரில் உள்ள சிவாலயத் திருமதிலில் காணும் சாசனம் ஒன்று சோமநாத ஜீயர்க்கு, இப் புத்தூர்க் கோயிலும் மடமும் உரிமையாக உதவப்பட்டனவாகத் தெரிகின்றது” என்று குறிப்பிடுகிறார், உரையாசிரியர் டாக்டர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளை.

மலையில் கார்த்திகைதீப தரிசனம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா 13 நாள்கள் நடைபெறுகின்றது. [துர்கை, பிடாரி, விநாயகர் உற்சவங்களில் தொடங்கி, சண்டேசுவரர் விழா முடிய மொத்தம் 17 நாள்கள் மஹா பிரம்மோத்சவ விழா நடக்கிறது]. தீபத் திருவிழாவின் போது, கோயிலிலுள்ள பெரும்பான்மையான உற்சவ மூர்த்தி களையும் வாகனங்களையும் கண்டு மகிழலாம். பத்தாம் நாள் திருவிழா அன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை பஞ்ச மூர்த்தி களும் கொடிமரம் எதிரே உள்ள மண்டபத்தில் காட்சி தருவார்கள். அப்போது, மஹா தீபாராதனை நடைபெறும்.

மலையில் மஹா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட 5 ½ அடி உயர கொப்பரை வைக்கப்படும். வட்டமான இரும்புப் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, திரியிட்டு, அதைக் கொப்பரை மீது வைத்து, அகண்ட தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றும் உரிமை காலங்காலமாக பர்வதராஜ குலத்தினருக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளது. நேரிலும், தொலைக்காட்சிகளிலும், இணைய தளங்களிலும் இக்காட்சியைக் காணும் லட்சக் கணக்கான பக்தர்கள் அதே நேரம் தத்தம் வீடுகளிலும் தீபம் ஏற்றி வணங்கி மகிழ்கின்றனர்.

“உரை பெற வகுத்த அருணை நகரின் ஒரு பக்தன் இடும்
ஒளிவளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரன்”
– என்று அருணை முருகனை வணங்குகிறார் அருணகிரியார்.

முருகப் பெருமானின் கீர்த்தி உலகறியும் பொருட்டு, சீர்பாதச் சிறப்பு, அவனது வேலாயுதத்தின் மகிமை போன்ற அனைத்தையும் வரைபடுத்தி, திருவண்ணாமலையில் வாழும் ஒரு பக்தனான அடியேன் இயற்றி அணிவித்த பெருமை மிக்க திருப் புகழ் ஆகியவற்றை, சொல்மாலைகள் நடுவே அழகுற விளங்கும் ஒரு பதக்கமாக (மதாணி) ஏற்றுக்கொண்ட கருணாமூர்த்தி என்று போற்றுகிறார்.அருணை முதலான திருத்தலங்களில் அறிவும், அறி தத்துவமும், அபரிமித வித்தைகளும் ‘அறி’ என இமைப்பொழுதின் வாழ்வித்த குமரனையும் வணங்கி, ஊரை விட்டுப் புறப்படுகிறோம்.

“இரவு பகல் பல காலும், இயல் இசை முத்தமிழ் கூறித்
திரமதனைத் தெளிவாக, திருவருளைத் தருவாயே
பர கருணைப் பெருவாழ்வே, பரசிவ தத்துவ ஞானா
அரனருள் சற்புதல்வோனே, அருணகிரிப் பெருமாளே”

(தொடரும்)

சித்ரா மூர்த்தி

Tags : Thiruppuga Panchputat Thalang ,Tiruvannamalai Region 6 ,Pandian ,
× RELATED இந்த வார விசேஷங்கள்