வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கியதால் குடியிருப்பு நலச்சங்க தலைவர் மீது தாக்குதல்

 

துரைப்பாக்கம், ஜூலை 10: வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கியதால் குடியிருப்பு நலச்சங்க தலைவரை தாக்கிய, தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 392 வீடுகள் உள்ளன. இங்கு, குடியிப்பு நலச் சங்க தலைவராக குருநாதன் (50) என்பவர் உள்ளார். அதே குடியிருப்பில் வசிப்பவர் வீரபாண்டியன் (35), தனியார் நிறுவன ஊழியர். இவர் குடியிருப்பு வாட்ஸ்அப் குரூப்பில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரபாண்டியனை குரூப்பில் இருந்து நீக்கி உள்ளனர்.

இதுகுறித்து, நேற்றுமுன்தினம் குருநாதன் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வீரபாண்டியன், குருநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்ததால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து வீரபாண்டியனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: