ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன், நேற்று முன்தினம் ஸ்ரீவை. புதுக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மொத்தக் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது என்னென்ன பொருட்கள் வந்துள்ளது, எவ்வளவு பொருட்கள் இருப்பு உள்ளது என்பது குறித்து பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்.
அப்போது ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக லாரியில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். இந்த லாரியின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இருந்த பதிவு எண்கள் அழிக்கப்பட்டிருப்பதை கவனித்த எம்எல்ஏ, அதுகுறித்து டிரைவரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு டிரைவர், தான் இன்றுதான் பணிக்கு வந்துள்ளதால், எனக்கு எதுவும் தெரியாது, என்றார்.
இதையடுத்து லாரியை ஆய்வு செய்த சரவணன் எம்எல்ஏ, லாரியின் டயர்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததும், சைடு மிரர் கண்ணாடி இன்றி வாகனத்தின் சேஸ் எண்ணும் அழிக்கப்பட்டிருந்ததும் வாகனத்தின் சட்டப்பூர்வ ஆவணங்கள், தகுதிச்சான்று, காப்பீடு உள்ளிட்டவை குறித்தும் சந்தேகம் எழுப்பினார். எம்எல்ஏவின் தொடர் கேள்வியை அடுத்து லாரி
டிரைவர், தனது செல்போனில் நிறுவனத்தின் மானேஜர் முத்துராஜ்க்கு போன் செய்து கொடுத்தார்.
எம்எல்ஏ: நானும் டிரைவர் தான் .நானும் வண்டி ஓட்டுனவன் தான்.. நீங்க ஒரு கவர்மெண்டுக்கு பொருள் கொண்டு போறீங்க.. காலதாமதம் இன்றி பொருளை சேர்க்க வேண்டும்லா. வண்டி டயர் எல்லாம் இப்படி இருக்கு.?
மேனேஜர்: முறையில்லாத வண்டி வச்சுட்டு ஓட்டுவோமா.. வண்டிக்கு எதுவென்றாலும் உடனே வேறு வண்டி மாத்திருவோம். ஸ்டெப்னியும் வச்சு இருக்கோம்.
எம்எல்ஏ: இல்ல, இல்ல, இல்ல சார், ஸ்டெப்னியை வச்சு மாத்துறதுக்காகவா சார் இங்க கொடுத்திருக்காங்க கான்ட்ராக்ட்? முறையான வண்டியை வச்சு இது பண்ணனும், இதுக்கு டயர் கூட சரியில்ல
மேனேஜர்: அது சரி, நீங்க யார் சார்?
எம்எல்ஏ: நான் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ பேசுறேன்.
மேனேஜர்: இது வந்து தூத்துக்குடில அவங்க வண்டிதான் சார்.
எம்எல்ஏ: சரி, அது கலெக்டர் வண்டியாவே கூட இருந்துட்டுப் போகட்டும். முறையா இருக்க வேண்டாமா?
மேனேஜர்: நீங்க செக் பண்ணிக்கோங்க சார். நாங்க முறையாதான் வச்சிருக்கோம், நீங்க செக் பண்ணனும்னா, செக் பண்ணிக்கோங்க சார். டயர் எல்லாம் கேக்குறீங்க. டயர் எல்லாம் யாரும் கேட்பது கிடையாது.
எம்எல்ஏ: ஓ அப்போ டயர் எப்படி இருந்தாலும் தப்பில்லையா சார்?
மேனேஜர்: டயருக்கு சம்பந்தமே இல்ல சார்.
எம்எல்ஏ: நீங்க யாரு? வண்டி ஓனரா?
மேனேஜர் : நாங்க வேலை பாக்கறவங்க.
எம்எல்ஏ: சார் நீங்க… இதுல எப்படி மேனேஜரா உங்கள போட்டாங்க? இல்ல, இப்படி வந்து இந்த மாதிரி அன் கண்டிஷன் அரைகுறையான வண்டியை வச்சு ஓட்டலாம்னு நீங்க சொல்றீங்க, அப்படிதான
மேனேஜர்: இது அரைகுறை வண்டியா சார் இது…
எம்எல்ஏ: அப்போ டயர் எப்படி, டயர் இப்படித்தான் வச்சிருப்பாங்களா?
மேனேஜர்: சார், நீங்க பேசறத… நீங்க தெரியாம பேசறீங்க சார். விடுங்க சார். போலாம் நீங்க. சார் வண்டில எல்லாம் செக் பண்ணிக்கோங்க சார். அவ்வளவுதான் வேற ஒண்ணும் தெரியாது விடுங்க சார் நீங்க.
எம்எல்ஏ: இல்ல, இது என்ன நிர்வாகமே தவறா இருக்கே, அப்போ எப்படி உங்களுக்குத்தான் கான்ட்ராக்ட் கொடுத்தாங்க.
மேனேஜர்: சார் என்ன நிர்வாகம் தவறா இருக்கு? என்ன சார் நிர்வாகம் தப்பா இருக்குன்னு நீங்க பார்த்தீங்க?
எம்எல்ஏ: அப்போ டயர் இப்படி போட்டு அன்றாடம் ஓட்டுறீங்களா?
மேனேஜர்: சார், டயருக்கு இதுக்கு என்ன சார் சம்பந்தம் இருக்கு. நீங்க வண்டி எப்படியிருக்குங்கறத பாருங்க. மற்றபடி என்ன சார் கேக்குறீங்க? டயர் எல்லாம் போகப்போறதுதானே சார். நாங்க சரி பண்ணப்போறோம்.
எம்எல்ஏ: கான்ட்ராக்ட் இப்படித்தான் எடுத்து நீங்க ஓகே பண்ணி எடுத்திருக்கீங்களா என்ன?. வண்டியில கண்ணாடி இல்ல.
மேனேஜர்: சார், நீங்க கான்ட்ராக்ட் பத்தி பேசாதீங்க சார். அப்படி வேணும்னா, மேல அதிகாரி இருப்பாங்க சார், ஆபீசர்ல, அவங்கள கேளுங்க சார் என்று கூறிவிட்டு போனை கட் செய்து விடுகிறார்.
தொடர்ந்து எம்எல்ஏ பேசும்போது, ஓனருக்கு போன் போட்டு கொடுங்கன்னா.. சின்ன பையன் கிட்ட போன் போட்டு கொடுத்து இருக்கீங்க. இப்படி வச்சு இந்த வண்டிய ஓட்ட முடியுமா? ஓட்டுவதற்கு எதுவும் ரூல்ஸ் இருக்கா… முறைப்படி தானே எல்லாம் கொடுப்பாங்க. இவங்க எல்லாம் இப்படி பேசினா இந்த பொருள் எப்படி போய் சேரும் சார். இவ்வாறு வாதம் நீண்டது.
இவர்களுக்கிடையே வாதம் நடந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைவர் முன்னிலையில் லவுட் ஸ்பீக்கரில் பேசி எம்எல்ஏ அசிங்கப்பட்டதால் கடுப்பான அவர், ஏன்பா சின்ன பையனுக்குலாம் எதுக்கு போன் போடுறீங்க… ஓனருக்கு போன் போடுங்க என்று டென்ஷனாக கூறினார். யாரும் ஓனருக்கு போன் போடாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ அறிவுறுத்தினார்.
* லாரிக்கு அடியில் ஆதரவாளர் ரீல்ஸ்
தவெக எம்எல்ஏ சரவணன், அங்கு நின்றிருந்த லாரி டயர்களை பார்த்து தேய்ந்து போயிருக்கிறதே என்று சொல்ல, அதை அவரது ஆதரவாளர் கீழே அமர்ந்து செல்ேபானில் ரீல்ஸ் எடுத்தார். இந்த ரீல்ஸ் வைரலானதையடுத்து, தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எங்கே போனாலும் ரீல்ஸை விடமாட்டாங்க போலிருக்கேன்னு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
