சென்னை: பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது; இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயக வரலாற்றில், முதல் சமத்துவ – சமூகநீதி ஆட்சியைத் தந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததில் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்னும் பண்பாட்டுப் பெயரை வழங்கும் சட்டம்; அனைத்து சாதி மக்களுக்கும் வழிபாட்டு உரிமையை மீட்டளித்த அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்; கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்ட மசோதா; சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு என நீதிக்கட்சி முதல்வராக இருந்து அவர் ஆற்றிய பணிகளே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதல் படியாக அமைந்தன என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
