கேடிசி நகர், ஜூலை 9: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல மாம்பழச்சங்க பண்டிகை 2வது நாளாக கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு அரிசி மற்றும் காணிக்கை வழங்கினர். நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாம்பழச்சங்க பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மாம்பழச்சங்க பண்டிகையும் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடந்து வருகிறது. முதல்நாளான நேற்று முன்தினம் பாளை மிலிட்டரி லைன் சேகர ஆலய வளாகத்தில் அருட் தொண்டர்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மாபெரும் பவனி பாளை நூற்றாண்டு மண்டபத்தை வந்தடைந்ததும் அங்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.
