ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர்
குருவின் குரு
மத்வாச்சாரியாரின் காலடிப்பட்ட மண். ராகவேந்திர ஸ்வாமி, 14 நாட்கள் இங்கேயே தங்கியிருந்து பூர்வர்களின் (குருவின்) பிருந்தாவனங்களுக்கு பூஜை செய்த இடம். அதுதான் சேண்பாக்கத்தில் உள்ள “நவ பிருந்தாவனம்’’ என்னும் இடம். ஏற்கனவே கடந்த இதழ்களில், இங்குள்ளஸ்ரீ கம்பாலூர் ராமச்சந்திர தீர்த்தரை பற்றியும்,ஸ்ரீ ஸ்ரீ பதி தீர்த்தர் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களை கண்டுள்ளோம். அந்த வகையில், தற்போது இதே சேண்பாக்கத்தில் மூலபிருந்தாவனமாக இருந்து அருளும் மகான் “ஸ்ரீ வித்யாபதி தீர்த்தரை’’ பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழகத்தில், விழுப்புரம் அருகில் திருக்கோயிலூர் என்னும் அழகான ஊர் உள்ளது. இங்கு, தென்பெண்ணை ஆற்று கரையில், அனைவருக்கும் மிகவும் பிடித்த மகான்ஸ்ரீ ரகூத்தம தீர்த்தரின் மூலபிருந்தாவனம் உள்ளது. இவரின் சீடர்தான்ஸ்ரீ வேதவியாச தீர்த்தர். வேதவியாச தீர்த்தருக்குப் பிறகு, உத்தராதி மடத்தை அலங்கரித்தவர் வித்யாபதி தீர்த்தர் ஆவார். ஆக, வித்யாபதியின் குருவின் குரு,ஸ்ரீ ரகூத்தமர் ஆவார் என்பது கூடுதல் பெருமை!
சந்தேகத்தைப் போக்கும் வித்யாபதி தீர்த்தர்
உத்தராதி மடத்தின் பரம்பரையில், 15வது பீடாதிபதியாக வித்யாபதி தீர்த்தர் இருந்து மக்களுக்கு அருளினார். பொதுவாகவே, ஞானிகளும், ரிஷிகளும், சந்நியாசிகளும் அளவோடு தேவைக்கு மட்டும் பேசுவார்கள். “மௌனம்’’ என்பதும் ஒரு வகையான தவ வாழ்வியல் முறை. இதனை மத்வ சம்ரதாய மகான்கள் பலரும் கடைப்பிடித்துள்ளனர். இன்றும்கூட ஏகாதசி அன்று சில மத்வ சம்ரதாய மகான்கள், மௌன விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
அப்படி மிக கடுமையாக மௌன விரதத்தை கடைப்பிடித்திருக்கிறார், வித்யாபதி தீர்த்தர். சாஸ்திரம் ரீதியாகவும், வேத புராண இதிகாசங்களில் யாருக்கேனும் அரிதான சந்தேகம் ஏற்பட்டால், வித்யாபதி தீர்த்தரிடத்திலேயே உரையாடி, அதனை நிவர்த்தி செய்து கொள்வார்கள். அத்தகைய அபாரமான பாண்டித்தியம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று வரலாறு கூறுகிறது.
நதியானது அமைதியாக – மௌனமாக அதன் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். அதில் நாம் மூழ்கி எழும் போது, புத்துணர்ச்சி கிட்டுகிறது அல்லவா.. அது போல, எப்போதும் மௌனமாக இருக்கும் வித்யாபதி தீர்த்தரிடத்தில், யாரேனும் ஆபத்து என்று வந்தால், உடனே அவர் களின் துயரங்களை போக்கி, புத்துணர்ச்சி பெறச் செய்கிறார்.
அப்படி, ஒரு சம்பவம்…
முகமதிய இளவரசருக்கும் எதிர் நாட்டு இளவரசருக்கும் கடும் போர் நடைபெற்றது. இதில், முகமதிய இளவரசர் மாண்டு போனார். பின்னர், முகமதிய இளவரசரின் உறவினர்களும், மக்களும் வருத்தத்தோடு இளவரசரை புதைத்துவிடுகிறார்கள். நாட்கள் கடந்தும், இளவரசரின் இழப்பை உறவினர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும், இளவரசனின் குழந்தைகள் தொடர்ந்து தந்தை இல்லாது அழுது கொண்டே இருந்தார்கள்.
காவி உடையில் கை மட்டும்
இதன் செய்தி, வித்யாபதி தீர்த்தருக்கு சென்றது. தந்தை இல்லாது குழந்தைகள் அழுவதை வித்யாபதி தீர்த்தரால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் பின்னர், முகமதிய இளவரசர் புதைக்கப்பட்ட இடத்திற்கு, வித்யாபதி தீர்த்தர் செல்கிறார். நேராக, இளவரசர் புதைக்கப்பட்ட மண் மேட்டின் மீது அமர்ந்து, மௌனமாக தவம் செய்யத் தொடங்கினார். வித்யாபதி தீர்த்தர் தவம் செய்வதை அறிந்த இளவரசரின் உறவினர்களும், மக்களும் ஒன்றுகூடினர். பல பகலும் இரவும் கடந்தன, வெயிலும் காற்றும் நகர்ந்தன. மெதுவாக கண்களை திறந்தார், வித்யாபதி தீர்த்தர்.
மௌனத்தை கலைத்து;“இளவரசர் இறக்கவில்லை. புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி, இளவரசரை அழைத்துச் செல்லுங்கள்’’ என்றுகூறி வித்யாபதி தீர்த்தர் சென்றுவிட்டார். அவர்கூறியபடி, இளவரசர் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்! முகமதிய இளவரசர், எழுந்து பேசத் தொடங்கினார்;“நீண்ட நேரம் என் தலையில் யாரோ கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு உணர்ந்தேன். அந்த கையின் மீது காவி உடை இருந்தது’’ என்று பதைபதைக்க இளவரசர் கூறினார்.
இதனை கேட்டவர்கள், வித்யாபதி தீர்த்தர் செய்த தவத்தையும், அவரின் மகிமைகளையும் இளவரசருக்கு விளக்க, வித்யாபதி தீர்த்தர் தவம் செய்த (சேண்பாக்கம்) இடத்தை, முகமதிய இளவரசர், அவருக்கே சாசனம் எழுதிக் கொடுத்தார்.தான் தவம் செய்த இடத்திலேயே (சேண்பாக்கம்) தன்னுடைய பிருந்தாவன பிரவேசம் ஆகவேண்டும் என்று எண்ணிய வித்யாபதி தீர்த்தர், அவர் எண்ணப்படியே.. சுமார் 1619ல், ஜேஷ்ட பகுள (வைகாசி மாதம்) சர்வ ஏகாதசி அன்று, வித்யாபதி தீர்த்தர் அதிகமாக தவம் செய்த யோக மண்டபத்தின் வடபுறம், கிழக்கு நோக்கிய வண்ணம், பிருந்தாவன பிரவேசமானார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 6:00 முதல் 10:30 வரை, மாலை: 5:00 முதல் 7:00 வரை. தொடர்புக்கு: 9486103950.
எப்படி செல்வது: வேலூரில் இருந்து சுமார் 4.கி.மீ., பயணித்தால் நவபிருந்தாவனம் கோயிலை அடையலாம். வேலூரில் இருந்து ஆட்டோ மூலமாகவே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.
ரா.ரெங்கராஜன்
