×

வயநாடு நிலச்சரிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கேரள: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கித் தவித்த 9 நபர்களை உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டு மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், 6 பேரை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. காணாமல் போனவர்களை மோப்ப நாய்களின் உதவியுடன் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

மீட்பு குழுவினர் 4 மண்டலங்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் வசித்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை மற்றும் சேறும் சகதியுமான சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கேரள தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து 2 வது நாளாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் இன்று மதியம் 1 மணியளவில் பார்வையிட உள்ளார்.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் அறிவித்துள்ளார். சுரங்க பணி செய்த நிறுவனம் விதிகளை பின்பற்றியதா என விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கேரளத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகிற நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் அரசு பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Tags : Wayanad ,Kerala ,Galadi ,Meppadi, Wayanadu district ,
× RELATED வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின்...