×

நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பென்னிகுக் நினைவு மண்டபம் பொலிவு பெறுமா?.. எதிர்பார்ப்பில் தென் மாவட்ட மக்கள்

 

கூடலூர், ஜூலை 8: லோயர் கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுக் நினைவு மணிமண்டபத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பெரியாறு அணை முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. தென் தமிழகத்தின் பசுமைக்கும், வறட்சியைத் தணித்த நீராதாரத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ள இந்த அணையை வடிவமைத்து கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் அர்ப்பணிப்பு இன்றளவும் மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

கடுமையான இயற்கை சவால்கள் மற்றும் பல்வேறு தடைகளைத் தாண்டி அக்கால தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட பெரியாறு அணை, இன்று வரை உறுதியாக நிற்பது பென்னிகுக்கின் பொறியியல் திறமைக்கும் விடாமுயற்சிக்கும் சான்றாக கருதப்படுகிறது. அவரது வாழ்க்கை வரலாறும், அணை உருவான வரலாறும் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதால் அவற்றை தமிழக அரசின் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எளிமையான வாழ்க்கை, நேர்மை, கடுமையான உழைப்பு மற்றும் பொதுநல அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கிய பென்னிகுவிக்கின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்றும், அவரின் பங்களிப்பை வரலாற்றுப் பதிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதே போல்ம் கர்னல் ஜான் பென்னிகுக்கின் நினைவைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையோர லோயர் கேம்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான 2,500 சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கல முழு உருவச் சிலையுடன் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டு 2013ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் ஜன.15ம் தேதி பென்னிகுக் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் விழாவும் மரியாதை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மணிமண்டபத்தில் பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாறு, அணை கட்டுமானத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள், அணையின் மாதிரி வடிவம், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டுமானப் படகு, சாய்வு நாற்காலி உள்ளிட்ட வரலாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் உள்ளே அமைந்துள்ளதால், மணிமண்டபம் இருப்பது பலருக்கும் தெரியாமல் கடந்து செல்கின்றனர். எனவே பிரதான சாலையில் தெளிவான வழிகாட்டிப் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், மணிமண்டபத்தில் உள்ள குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி , மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ளதைப் போன்று பெரியாறு அணை கட்டுமான வரலாறையும், பென்னிகுவிக்கின் வாழ்க்கைப் பயணத்தையும் விளக்கும் ஒலி ஒளி காட்சியகம், 3-டி தொழில்நுட்ப வசதியுடன் குறும்படம் திரையிடும் கலையரங்கம், இசை நீரூற்று உள்ளிட்ட சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியாறுவைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில்,‘‘பென்னிகுவிக்கின் தியாகமும், பெரியாறு அணையின் வரலாறும் எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்காக பாடத்திட்டத்தில் அவரது வரலாற்றை இணைப்பதோடு, லோயர் கேம்ப் நினைவு மணிமண்டபத்தை உலகத் தரத்தில் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 

Tags : Penny Cook Memorial Hall ,Gudalur ,southern ,Tamil Nadu government ,Colonel ,John Penny Cook Memorial Hall ,Lower Camp ,Theni ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா