பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் கொள்ளிடம் கடைமடை பகுதியில் காயும் புழுதி உழவு நிலங்கள்

*கேள்விக்குறியானது சம்பா சாகுபடி

கொள்ளிடம் : கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராததால் உழவு செய்த நிலங்கள் வறண்டு போய் உள்ளன.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு இந்த வருடம் சென்ற வருடம் போல வழக்கமாக தண்ணீர் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து குறைந்தே இருந்து வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் கடலோர பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மழை பெய்வதும் இல்லாமல் போய்விட்டது.

கடலோர பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்புகளில் சம்பா ஒருபோக சாகுபடி மட்டுமே செய்ய முடியும். குருவை நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை அப்பகுதியில் இல்லை.

கடந்த பத்தாண்டு காலமாக உப்பு நீராக மாறிய நிலத்தடி நீரை பயன்படுத்தி நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடலோர பகுதி கிராமங்களில் ஒருபோக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

இந்த வருடம் ஒரு போகசம்பா நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். முன்கூட்டியே நிலங்களில் கோடை உழவு செய்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேர முடியாத நிலையில், இனிமேல் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் காலம் மேலும் மேலும் தள்ளி போகும். அதிக காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்து விடும்போது கொள்ளிடம் கடைமடை பகுதியை எட்டுவதற்கு ஒருமாத காலம் ஆகும்.

அதனை வைத்து சம்பா நெற்பயிர் சாகுபடி செய்வது கடினமான ஒன்றாகும். சாகுபடி காலம் அதிக நாட்கள் தள்ளிப் போகும் நிலையில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகும். இதுகுறித்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், வருடம் தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் கொள்ளிடம் கடைமுறை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும்.

அதனை வைத்து இப்பகுதியில் சம்பா சாகுபடி பணி ஆயத்தமாகும். ஆனால் இதுவரை இந்த வருடம் மேட்டூர் அணை நிரம்பாததால் தண்ணீர் திறந்து விட முடியவில்லை. இனிமேல் தண்ணீர் திறந்து விடும் காலம் தள்ளிப்போய் சம்பா சாகுபடி செய்யும் காலமும் அதிகம் தள்ளிப்போகும்.

இதனால் குறிப்பாக கொள்ளிடம் கடைமடை பகுதியில் இந்த வருடத்திற்கான சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியாகி விட்டதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: