×

மேற்கு வங்கத்தில் பயங்கரம் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குளத்தில் வீசி கொன்ற அவலம்: மம்தா பானர்ஜி கண்டன பேரணி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அடித்து உயிருடன் குளத்தில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூப்யூர் பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை(4ம் தேதி) தனது தோழியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி பார்த்த பெற்றோர், உறவினர்கள் சிறுமி காணாமல் போனது பற்றி பரூய்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் உடல் அங்குள்ள ஒரு குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுமியின் உடல் கூராய்வு அறிக்கையின்படி, சிறுமியின் பிறப்புறுப்பில் காயங்கள், உடலின் பல்வேறு பகுதிகளில் கடித்ததற்கான அடையாளங்கள், தலையில் கனமான பொருளால் தாக்கியதற்கான தடயம் போன்றவை உள்ளன. சிறுமி உயிருடன் குளத்தில் வீசப்பட்டுள்ளான். நீரில் மூழ்கி அவள் இறந்துள்ளாள்.

இந்த வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ஆனந்த் சர்க்கார் நபர் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. அவர்களுடன் காவல்துறையும் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இந்த பலாத்கார கொலையில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அத்துடன் காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து மேற்குவங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது காளிகாட் இல்லத்தில் இருந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்நி பேரணியாக சென்றார். அவருடன் எம்பி டோலா சென், பிரதிமா மண்டல் மற்றும் டெரைக் ஓ பிரையன் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு சென்றனர்.

 

Tags : West Bengal ,Mamata Banerjee ,Kolkata ,Parupyur ,South 24 Parganas district ,
× RELATED Whatsapp ‘UserName’ வசதி குறித்த பாதுகாப்பு...