ஒன்றிய அரசின் விதிமுறைகளால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் கழுத்து நெரிக்கப்படுகிறது: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள உள்ளூர் பேருந்து மற்றும் லாரி பாடி உருவாக்கும் பட்டறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சென்று அங்கு உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோவை அவர் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுடன் பகிர்ந்து கொண்டுள்ள பதிவில்,‘‘இரும்புத் தகடுகள், வெல்டிங் தீப்பொறிகள், சுத்தியல் சத்தம் இவற்றுக்கு மத்தியிலும், கைவினைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையால் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள்.

ஜெய்ப்பூரின் உள்ளூர் பேருந்து மற்றும் லாரி பாடி உருவாக்கும் பட்டறைகளில் வேலைவாய்ப்பையும் நாட்டின் முன்னேற்றத்தையும் தங்கள் சொந்தக் கைகளால் உருவாக்கும் ஒரு இந்தியாவை நாம் காண முடிகிறது. இருப்பினும் வருந்தத்தக்க வகையில் டெல்லியில் போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள் நாடு முழுவதும் உள்ள இந்த சிறு தொழில்களை முடக்குகின்றன. தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் பேருந்து தீ விபத்துக்களுக்கான பழி, வாகனத்தின் உடல் அமைப்பை மட்டுமே உருவாக்கும் இந்த தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகின்றது.

ஆதரவு அளிக்கப்பட வேண்டிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் கழுத்துக்கள் வேண்டுமென்றே நெரிக்கப்படுகின்றன. மேக் இன் இந்தியா என்பது வெறும் முழக்கமே. மோடி அரசின் கொள்கைகள் பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டால் அது வணிகத்தை மட்டும் நிறுத்தாது. திறன்கள் இழக்கப்படும். வேலைவாய்ப்புகள் மறையும். சாமானிய மக்கள் மீதான பணவீக்கச் சுமை அதிகரிக்கும். எப்போதும் போல கடின உழைப்பாளி இந்தியர்கள் இதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

Related Stories: