மகளிர் உலக கோப்பை டி20: இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 150

லண்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் சோபி மோலினியூக்ஸ், இங்கிலாந்து அணியை பேட் செய்ய அழைத்தார். ஏமி ஜோன்ஸ், டேனி வியாட் ஹோட்ஜ் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். ஜோன்ஸ் 6, ஹோட்ஜ் 8 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

கேப்டன் நதாலி ஸ்கிவர் பிரன்ட் ஆலிஸ் கேப்சி ஜோடி 3வது விக்கெட்டுக்கு ரன் குவிக்கப் போராடியது. ஓரளவு தாக்குப்பிடித்த கேப்சி 23 ரன் எடுக்க, ஹீதர் நைட் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து 10.5 ஓவரில் 70 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஸ்கிவர் பிரன்ட் பிரெயா கெம்ப் இணைந்து 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸி. பவுலர்கள் திணறினர். ஸ்கிவர் பிரன்ட் அரை சதம் விளாசி அசத்தினார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. ஸ்கிவர் பிரன்ட் 58 ரன் (53 பந்து, 5 பவுண்டரி), பிரெயா கெம்ப் 44 ரன்னுடன் (28 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கின் கார்த், லூசி ஹாமில்டன், சோபி மோலினியூக்ஸ், அன்னபெல் சதர்லேண்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஏற்கனவே நடந்த 9 மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

2020ல் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரின் பைனலில் ஆஸி. 85 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிட த்தக்கது.

Related Stories: