புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தை பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களை முடக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில், இன்ஸ்டாகிராமில் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த விளம்பரங்களில் பாலியல் வன்கொடுமை வீடியோ மற்றும் குழந்தைகள் வீடியோ போன்ற சொற்களை கொண்ட கட்டண விளம்பரங்கள் இருப்பதாகவும், அவற்றை அழுத்தினால் அவை டெலிகிராம் செயலியில் உள்ள சேனல்களுக்கு அழைத்துச் சென்று, வீடியோக்கள் வெறும் ரூ.100ல் விற்பனைக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் மற்றும் அணுக வழிவகுக்கும் அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் முடக்குமாறு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
