×

ஆம்ஆத்மி, திரிணாமுல், உத்தவ் கட்சி எம்பிக்களை வளைத்து போட்டாலும் 3ல் 2 பங்கு பெரும்பான்மையின்றி திணறும் ஒன்றிய பாஜக அரசு: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மீண்டும் சிக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய பலம் இல்லாததால், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 2029ம் ஆண்டுக்குள் கொண்டு வரவும், அதனுடன் சேர்த்து மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் (ஜூலை 20ம் தேதி தொடக்கம்) புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசித்து வருகிறது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாதது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மகளிர் இடஒதுக்கீட்டை விரைவுபடுத்துவதற்கான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்ததுடன், அதற்குத் துணையாக இருந்த தொகுதி மறுவரையறை மசோதாவும் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, மக்களவையில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியின் பலம் 293 ஆக உள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் 7 எம்பிக்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்பிக்கள் மற்றும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் 6 எம்பிக்கள் ஆளும் கூட்டணிக்கு மாறினாலும், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டால் கூட ஆளும் கூட்டணியின் பலம் 319 என்ற எண்ணிக்கையை மட்டுமே எட்டும். இது அனைத்து உறுப்பினர்களும் அவைக்கு வந்து வாக்களிக்கும் பட்சத்தில், அவசியமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையான 360 இடங்களை விட கிட்டத்திட்ட 41 இடங்கள் குறைவாகும். அதேபோல், மாநிலங்களவையிலும் ஆளும் கூட்டணியில் தற்போது 152 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் அங்கு சட்டத்திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 161 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே, இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமானால் ஆளும் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அல்லது கணிசமான எம்பிக்கள் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது அவசியமாகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்னர், அந்தந்த மாநில அரசியலில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் எதிர்கட்சியாக இருந்த கட்சிகளின் ஆதரவை ஒன்றிய பாஜக அரசு எதிர் நோக்கியுள்ளது. எனவே ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பின் 81 (2) (ஏ) பிரிவில் கூறப்பட்டுள்ள ‘ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்ற அடிப்படை கொள்கையில் திருத்தம் செய்ய முன்மொழியவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை விட மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ள உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்பதால் தென்மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கான மக்களவை இடங்கள் 50 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளன. முதலில் 1976ம் ஆண்டும், பின்னர் 2001ம் ஆண்டும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும் இந்த முடக்கம் 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதும் 81வது பிரிவின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதால், தென்மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த காலக்கெடுவை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தாமதமாவதால், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

அப்போது, மக்களவை விரிவாக்கத்தின் போது மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் விகிதாச்சாரம் மாறாது என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50 சதவீதம் கூடுதலாக இடங்கள் வழங்கப்படும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். மாநிலங்களுக்குள் இருக்கும் தொகுதிகளை மறுவரையறை செய்ய தற்போது 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் நிலையில், புதிய மசோதா அதனை 2011ம் ஆண்டாக மாற்ற வாய்ப்புள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதால், தென்மாநிலங்கள் மற்றும் பிற கட்சிகளின் கவலைகளுக்கு உரிய தீர்வு கண்டால் மட்டுமே இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்பதால் பாஜக அரசு தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது.

Tags : BJP government ,Ahmadmi ,Trinamul ,Uddhav ,NEW DELHI ,PARTY ALLIANCE ,Lok Sabha ,Legislatures ,
× RELATED அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார்...