கடையம்: கடையம் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் வாகனங்கள் எதிரெதிரே வரும் போது தெரியாத அளவுக்கு இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வளைவு மிரர் (Curve Mirror) அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் வழியாக மாலிக் நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இதனை தினமும் ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், செட்டிகுளம், கல்யாணிபுரம், சம்மன் குளம், கருத்தப்பிள்ளையூர், வீராசமுத்திரம், மாலிக் நகர், ரவணசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் அதிகளவில் இவ்வழியில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பாதை பகுதி கூர்மையான வளைவுகளுடன் இருப்பதால், எதிர்வரும் வாகனங்களை முன்கூட்டியே கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும் ரயில்வே துறையும் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் பல முறை சிறிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மேலும் அதிக ஆபத்து உள்ளது. உடனடியாக வளைவு மிரர்களை நிறுவினால் விபத்துகளை பெருமளவு தடுக்க முடியும். இந்தப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டால், பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாடப் பயணம் பாதுகாப்பானதாக மாறும்’ என்றனர்.
