×

பஸ்சில் உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுனர்: புதுச்சேரி அருகே நெகிழ்ச்சி

புதுச்சேரி: பஸ்சில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (30). இவர் நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து தனது பெற்றோருடன் புதுச்சேரிக்கு தமிழக அரசு பேருந்தில் வந்துள்ளார். அந்த பேருந்து புதுச்சேரி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஐஸ்வர்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டு ஓடும் பேருந்திலே உயிருக்கு போராடினார். உடனே பேருந்தில் இருந்தவர்கள் முதலுதவி செய்தும் பயனளிக்காத நிலையில், பேருந்தை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு செலுத்துமாறு ஓட்டுநரிடம் நடத்துனர் கூறியுள்ளார்.

இதையடுத்து ஓட்டுநர் வேகமாக அப்பேருந்தை நேரடியாக ஜிப்மருக்கு இயக்கி, அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் அருகே நிறுத்தினார். பிறகு அங்கிருந்தவர்கள் ஐஸ்வர்யாவை உடனே மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து உள்ளிருப்பு நோயாளியாக ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மேற்கொண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அரசு பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆம்புலன்சை எதிர்பார்க்காமல் நேரடியாக பேருந்திலேயே ஜிப்மருக்கு இளம்பெண்ணை விரைந்து அழைத்து வந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக அதில் பயணித்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags : Lainichi ,Puducherry ,JIPMER ,Hospital ,Aishwarya ,Tindivanam ,Villupuram district ,
× RELATED தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில்...