×

பண்ணைக்குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு

 

ஆண்டிபட்டி, ஜூலை 3: மதுரை மாவட்டம் தென்பழஞ்சி பகுதியைச் சேர்ந்த மோகன்-பாண்டிச்செல்வி தம்பதி மகன் தஷ்வந்த் (4). பாண்டிச்செல்வியின் தந்தை முருகன், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், முருகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரைப் பார்ப்பதற்காக பாண்டிச்செல்வி தனது மகன் தஷ்வந்துடன் நேற்று முன்தினம் கதிர்நரசிங்கபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.

நேற்று சிறுவன் தஷ்வந்த் அங்குள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த பால்கனி என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 6 அடி ஆழமுள்ள விவசாயத் தோட்டத்துப் பண்ணைக்குட்டை அருகே விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் திடீரென குட்டை தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினான். சிறுவன் தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பண்ணைக்குட்டையில் இறங்கி தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், சிறிது நேரத்திலேயே சிறுவன் தஷ்வந்த் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜதானி போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Andipatti ,Dashvanth ,Mohan-Pandichelvi ,Thenpalanchi ,Madurai district ,Pandichelvi ,Murugan ,Kathirnarasinghapuram ,Theni district ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா