×

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு வக்கீல் நியமனத்தில் லஞ்சம்: தவெக வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஐந்து லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, மாற்று கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுவருவதாக தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஜூன் 5ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பட்டியல் இனத்தை சேர்ந்த, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தான் தவெக மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பித்தேன்.

விண்ணப்பம் செய்வதற்கான கெடு ஜூன் 29ம் தேதி மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகலிலேயே நியமன பட்டியல் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் விசாரித்தபோது அதுதான் இறுதி பட்டியல் என கூறியதால் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர். தவெக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளது.

தங்கள் கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு உள்ளது. எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தவெக ஆட்சியில் எல்லா துறையிலும் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியில் பேட்டி கொடுத்தாலும், ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழல்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. சில நாட்களுக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், பதவிகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல பதிவுத்துறையிலும் 46 பணியிடங்கள் நியமனத்திலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. தற்போது, அரசு வக்கீல் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக அக்கட்சியைச் சேர்ந்த பெண் வக்கீலே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Thaveka ,Madras High Court ,Chennai ,
× RELATED இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை...