×

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆலோசனை கூட்டம்

 

ஆண்டிபட்டி, ஜூலை 2: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு -2027 முதற்கட்டப் பணிகள் வருகின்ற 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, 16.07.2026 முதல் 31.07.2026 வரை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது சுயவிபரத்தினைத் தானே பதிய ஏதுவாக, https://Se.census.gov.in என்ற இணையதளம் மூலம் சுயக்கணக்கெடுப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேனி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளுக்கு 33 பொறுப்பு அலுவலர்களும் 39 களப்பயிற்றுநர்களும், 35 தொழில்நுட்ப உதவியாளர்களும், ஒரு பல்நோக்கு பணியாளரும், 1959 கணக்கெடுப்பாளர்களும் மற்றும் 312 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரும் 16.07.2026-க்கு முன்பாகவே அனைத்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குக் களப்பயிற்றுநர்கள் மூலம் ஒரு குழுவிற்கு 50 பேர் வீதம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஒவ்வொரு பொறுப்பு அலுவலகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு பொறுப்பு அலுவலகத்திற்கும் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட விபரம், பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிக்குரிய நாள் மற்றும் பயிற்சி இடம் தொடர்பாக விரைவாக முடிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், மாவட்ட பொறுப்பு அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Andipatty ,Theni District Collector's Office Partnership ,District Revenue Officer ,Rajakumar ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்