சென்னை: தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 40 நாட்களாகவே குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக நாங்கள் கூறி வருகிறோம். அதன் வெளிப்பாடு தான் கைது நடவடிக்கை. எங்களது பல எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி, 20கோடி, 50 கோடி எனப் பேரம் பேசியுள்ளனர்.
அவ்வாறு தொடர்பு கொள்ளாத எம்.எல்.ஏக்களே இல்லை எனும் அளவிற்கு இந்த 40 நாட்களாக மிரட்டும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, எங்களது எம்.எல்.ஏ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், குதிரை பேரத்தில் ஈடுபட்டு பணம் கொடுக்க முயன்ற நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறை தற்போது கையும் களவுமாக கைது செய்துள்ளது.
ஊழல்வாதிகளைச் சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டு, குட்கா வழக்கில் தொடர்புடைய சி.வி.விஜயபாஸ்கர் போன்றவர்களை இவர்கள் எப்படிச் சேர்த்துக் கொள்கிறார்கள்? சட்டப்பூர்வமாக வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது கண்டிப்பாகத் தொடரும். அதில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.
* வைகோ பொய் சொன்னாரா?
இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் பிரச்சாரம் பண்ணுகிறேன் என்று விஜய் கூறியதாக வைகோ கூறினாரே என்று கேட்டதற்கு, ‘‘அப்படிப்பட்ட வார்த்தையே கண்டிப்பாக நூறு சதவீதம் சொல்லவில்லை. அங்கு என்ன நடந்தது என்று வைகோவிடமே கேளுங்கள்’’ என்று நிர்மல்குமார் கூறினார்.
