பெங்களூருவில் நடிகைக்கு பாலியல் தொல்லை: நள்ளிரவில் நடந்த அராஜகத்தால் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூரு நகரில் நள்ளிரவில் நடிகை திவ்யா சுரேஷ் தனது உறவினருடன் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை திவ்யா சுரேஷ் (30), கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் தனது உறவினர்களுடன் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இவரை பின்தொடர்ந்து வந்து, பாலியல் ரீதியாக அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, அந்த நபரை கண்டித்தும் அவர் தனது செயலை நிறுத்தவில்லை. தான் கார் ஏறும் வரை அந்த நபர் பின்தொடர்ந்து வந்ததாக திவ்யா சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நடிகை திவ்யா சுரேஷ் கூறுகையில், ‘நாங்கள் காரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அந்த நபர் எங்களை பின்தொடர்ந்து வந்து அநாகரிகமாக நடந்துகொண்டார். நாங்கள் அவரை எச்சரித்த பிறகும் அவர் தனது செயலை நிறுத்தவில்லை. பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. இது போன்ற சூழலில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். நடிகையின் இந்த பதிவை தொடர்ந்து, பெங்களூருவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. முன்னதாக, 2025ம் ஆண்டு பெங்களூருவில் ஹிட் அண்ட் ரன் விபத்தில் திவ்யா சுரேஷ் ஈடுபட்டதாக கூறி, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் பெங்களூரு போலீசார் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Related Stories: